திருமங்கலம் அருகே பஸ் வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்: டவுன் பஸ் சிறைபிடிப்பால் பரபரப்பு

4 hours ago 4

திருமங்கலம்: திருமங்கலம் அருகே, கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கக்கோரி, கிராம மக்கள் டவுன் பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே புங்குன்குளம் கிராமம் உள்ளது. இந்த ஊருக்கு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து காலை, மாலை என இருவேளை டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த சேவை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு திருமங்கலத்தில் இருந்தே புங்கன்குளத்திற்கு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், கிராம மக்கள் 2 பஸ் மாறி பெரியார் பஸ் நிலையம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். புங்கன்குளம்-பெரியார் பஸ் நிலையம் இடையே மீண்டும் பஸ் சேவையை தொடங்க வேண்டும் என கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு இன்று காலை வாகைக்குளம்-திருமங்கலம் ரோட்டில் புங்கன்குளம் பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது திருமங்கலத்தில் இருந்து வந்த டவுன் பஸ்சை சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த திருமங்கலம் தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்பையா, போக்குவரத்து கழக கிளை மேலாளர் முத்துமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post திருமங்கலம் அருகே பஸ் வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்: டவுன் பஸ் சிறைபிடிப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article