தழுவக்குழைந்த விநாயகர்

2 hours ago 4

பூவுலகங்களுக்கெல்லாம் அன்னையாக விளங்குபவள் பார்வதிதேவி. அவள் ஒரு சமயம் கயிலையில் இறைவனுடன் தனித்திருந்து உரையாடுகையில், விளையாட்டாக இறைவனுடைய திருக்கண்களைத் தம் கையால் மூடினாள். உலகுக்கு ஒளி கொடுக்கும் சூரிய சந்திரர்களை இருவிழிகளாகக் கொண்ட பெருமானின் விழிகள் மூடப்பட்டதனால், உலகம் ஒளி இழந்து இரண்டு போயிற்று. தவறு இழைத்தமையை உணர்ந்த அம்பிகை, இறைவனை வணங்கி, தான் செய்த பிழையினால் உண்டான பழியை நீக்கிக் கொள்ளத் தனக்கு வழிகூறுமாறு வேண்டினாள். இறைவனும், இறைவியைக் காஞ்சி நகரத்துக்குச் சென்று லிங்கம் அமைத்து நாள்தோறும் பூஜித்துப் பழியை நீக்கிக் கொள்ளுமாறு கூறியருளினார். இறைவியும் கயிலையை நீங்கி, வழியிடைப் பல தலங்களைக் கண்ணுற்றுக் காஞ்சியை அடைந்தாள் என்பது வரலாறு.இந்த நிகழ்வினை, அருணகிரிநாதர் தாம் இயற்றிய காஞ்சிக் குமரகோட்டத்துத் திருப்புகழ்ப் பாடலில், இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம் வேற்றுப் பரிந்து, இடபமேற் கச்சி வந்தஉமையாள் என்று கூறுவார். அவ்வாறு அம்பிகை காஞ்சியை வந்து அடைந்த நாள் ஒரு ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசி திதி, பூரம் நட்சத்திரம் ஆகும்.காஞ்சியில் உள்ள (திருவேகம்பம்) மாமரத்தினடியில் கம்ப நதிக்கரையில் மணலால் லிங்கம் நிறுவி, ஆகாம முறைப்படி நாள்தோறும் இறைவரை, அம்பிகை பூஜித்து வந்தனள்.

இவ்வாறு நியமங்களுடன் இறைவரைப் பூஜிக்கும் அம்பிகையின் உறுதிப் பாட்டைச் சோதிக்க எண்ணிய இறைவர், இவ்வுலகில் உள்ள அனைத்துத் தீர்த்தங்களையும் ஒருங்கு திரண்டு வருமாறு மனத்தில் எண்ணினர். அவ்வாறே தீர்த்தங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு, கம்பையாற்று நீரோடு கலந்து, பிரளய கால வெள்ளம் போல, வானை முட்டி ஆரவாரத்துடன் வருவனவாயின. அதைக் கண்ட தேவர் முதலியோரும் அஞ்சினர். அம்பிகையும் திடுக்கிட்டு, நெஞ்சம் பதைத்து இவ்வெள்ளம் பெருமான் மீது செல்லுமே என நடுங்கித் தம் திருமேனியில் அதிர்ச்சி உண்டாக எழுந்து சென்று ஒரு பச்சைக்கொடி, சிவந்த பொன் மலையை இரண்டு கொழுந்துகளை இரண்டு பக்கங்களிலும் அனுப்பவிட்டுத் தழுவியது போல, பீடத்தில் மீது வலது முழந்தாளை ஊன்றிக் கொண்டு இறைவனைத் தழுவிக் கொண்டார்.அம்மையார் தன் தனங்களாலும், வளையல் அணிந்த கைகளாலும் நெருக்கமாகத் தழுவிக் கொண்டார். அதற்கேற்ப இறைவன் தம் திருமேனியைக் குழைத்து தனத் தழும்பையும் வளைத்தழும்பையும் தன் திருமேனியில் ஏற்று அணிந்து கொண்டார். இதன்மூலம் இறைவர் தழுவக் குழைந்தவர் ஆயினார்.காஞ்சியில், சிவபெருமானின் இத்திரு விளையாட்டினைநினைவு கூரும் வகையில் தழுவக்குழைந்த விநாயகர் என்னும் திருப்பெயர் தாங்கி, பிள்ளையார் பாளையம் கிருஷ்ணாராயர் தெருவில் (ஏறக்குறைய வட கோடியில்) சாலையின் ஓரத்தில் கிழக்கு நோக்கிய சந்நதியில் இப்பெருமான் எழுந்தருளியுள்ளார். சற்றுபெரிய மூல மூர்த்தியாக இப்பெருமான் காட்சி தருகிறார் (காஞ்சியில் வேறு சில பகுதிகளிலும் இப்பெயருடன் சில கோயில்கள் உள்ளன.)

நாகலட்சுமி

The post தழுவக்குழைந்த விநாயகர் appeared first on Dinakaran.

Read Entire Article