சென்னை,
பெஞ்சல் புயலின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையினால் அங்குள்ள சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரிநீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், மணலூர்பேட்டை பகுதிகளில் உள்ள தென்பெண்ணையாற்றை கடந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எல்லீஸ்சத்திரம், தளவானூர் ஆகிய தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் இருபுறங்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
தற்போதும் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் ஆற்றை யாரும் கடக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆற்றுப்பகுதிகளில் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் செல்வதை தடுக்கவும், குளிப்பதை தடுக்கும் வகையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் தளவானூர் அணைக்கட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந் தேதி உடைந்து சேதமடைந்ததோடு 3 ஷட்டர்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. அணைக்கட்டு உடைந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரையிலும் புதிய அணைக்கட்டை கட்டுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டும், தளவானூர் தென்பெண்ணையாற்றுக்கு வரும் தண்ணீர் அப்படியே வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது.
ஏற்கனவே எல்லீஸ்சத்திரத்தில் உள்ள அணைக்கட்டு உடைந்த நிலையில் அங்கு புதிய அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் தேங்கியுள்ளது. இருந்தபோதிலும் அந்த அணைக்கட்டில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீரை தளவானூரில் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. தளவானூரில் இன்னும் புதிய அணைக்கட்டு கட்டப்படாததால் தென்பெண்ணையாற்றில் ஓடும் தண்ணீர் முழுவதையும் சேமித்து வைக்க முடியாமல் அப்படியே வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். அடுத்த பருவமழை காலத்திற்குள் தளவானூரில் புதிய அணைக்கட்டை அரசு விரைந்து கட்டி முடித்து தண்ணீரை சேமித்து வைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.