சென்னை: போர்க்கால ஒத்திகையை இன்று நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2 நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து மாநில அரசு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 300மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.ஆலோசனை கூட்டத்தில், இந்திய எல்லைப் பகுதிகளில் வான் வழி தாக்குதல், போர் மற்றும் ஏவுகணை தாக்குதல், எதிரிகள் தாக்கும்போது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். அந்நாட்டினர் எல்லைக்குள் நுழைந்தால் சைரன் ஒலிப்பது, மின் தடை ஏற்பட்டால் எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று பயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஸ் கலந்து கொண்டார். அவருடன் போலீஸ் உயர் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று மாலை தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் மற்றொரு கூட்டம் நடந்தது. இதில் உள்துறை செயலாளர் தீரஜ்குமார், வருவாய்த்துறை செயலாளர், டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் கமாண்டோ படை ஏடிஜிபி, கல்பாக்கம் அனுமின்நிலைய இயக்குநர், துறைமுக தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மக்களுக்கான பாதுகாப்பு ஒத்திகை நடத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை துறைமுகம் ஆகிய இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும். எதிரிநாட்டு விமானம் குண்டுபோட வந்தால் என்ன செய்வது என்பது குறித்து ஒத்திகை நடக்கிறது.
இதில் மாநில அவசரகால நடவடிக்கை மையம் மற்றும் ஒத்திகை நடைபெறும் பகுதியின் கலெக்டர்கள், தீயணைப்பு வீரர்கள், அதுதொடர்பான வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒத்திகை 30 நிமிடம் நடக்கிறது. அப்போது எதிரி நாட்டு விமானம் வந்தால், சைரன் ஒலிக்கும். அந்த நேரத்தில் அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒத்திகை நடைபெறுகிறது.
The post தலைமை செயலாளர், டிஜிபி அவசர கூட்டம் தமிழ்நாட்டில் 2 இடங்களில் போர்க்கால ஒத்திகை appeared first on Dinakaran.