தண்டேவடா: சட்டீஸ்கரில் தலைக்கு ரூ.25 லட்சம் அறிவிக்கப்பட்டு இருந்த பெண் நக்சல் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். சட்டீஸ்கரின் தண்டேவடா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். கீதம் மற்றும் பைராம்கர் காட்டுப்பகுதியில் காலை 9 மணி அளவில் மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் நக்சல்கள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இதனை தொடர்ந்து நக்சல்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு நக்சல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சம்பவ இடத்தில் இருந்து நக்சலின் சடலத்தை மீட்ட பின்னர் அது அண்டை மாநிலமான தெலங்கானாவின் வாரங்கல் பகுதியை சேர்ந்த பெண் நக்சலான ரேணுகா என்ற சரஸ்வதியின் உடல் என அடையாளம் காணப்பட்டது. இவரது தலைக்கு போலீசார் ரூ.25 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர் நக்சல்களின் சிறப்பு மண்டல குழு உறுப்பினராக செயல்பட்டு வந்துள்ளார். என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post தலைக்கு ரூ.25 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டவர் என்கவுன்டரில் பெண் நக்சல் பலி appeared first on Dinakaran.