கடலூர், பிப். 10: தற்கொலை கடிதம் எழுதி, வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்து விட்டு மாயமான மாவட்ட ஆட்சியரின் நேர்முக எழுத்தர் திருச்செந்தூரில் மீட்கப்பட்டார். கடலூர் அருகே உள்ள ஈச்சங்காடு மேட்டு தெருவை சேர்ந்தவர் காண்டீபன் மகன் மகேஷ்(30). இவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த ஆகஸ்ட் மாதம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் நேர்முக எழுத்தராக நியமிக்கப்பட்டு வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மகேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது மகேஷ், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஒரு கடிதத்தை எழுதி, அதை தனது வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்து விட்டு மாயமானது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷை தேடி வந்தனர். இந்நிலையில் மகேஷ் திருச்செந்தூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மகேஷை ேநற்று மீட்டு வந்தனர்.
இந்நிலையில் மகேஷ் மாயமாவதற்கு முன் எழுதி வைத்த கடிதம் முகநூலில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், நான் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று கடந்த ஆகஸ்ட் மாதம் சத்துணவுத் துறையில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது முதல் கடினமான பணிச்சுமை காரணமாக என்னால் கோப்புகள் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தற்போது என்னை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு மாற்றம் செய்தனர்.
அங்கும் பணி சுமை காரணமாக கோப்புகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதனால் உயர் அதிகாரிகள் என்னை திட்டுகின்றனர். இதனால் நான் கடுமையான மன உளைச்சலில் உள்ளேன். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளேன். அம்மா என்னை மன்னித்து விடுங்கள். நான் துளசி வயிற்றில் மீண்டும் பிறப்பேன். என்னுடைய சாவே கடைசியாக இருக்கட்டும், என மூன்று பக்க அளவில் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.
The post தற்கொலை கடிதம் எழுதி பகிர்ந்து விட்டு மாயமான கலெக்டரின் நேர்முக எழுத்தர் திருச்செந்தூரில் மீட்பு appeared first on Dinakaran.