ஜெயங்கொண்டம், ஏப்.2: தற்காலிக கட்டிடத்தில் மழைநீா் ஒழுகி ஆவணங்கள் நனைகின்றன. அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில், கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாக தயாா் நிலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் எப்போது திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அனைத்துத் துறைகளுக்கும் தாய்த் துறையாக விளங்கி, நிா்வாக அமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்ந்து, சமுதாய வளா்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கு பெரும் பங்காற்றி வருவது வருவாய்த் துறை ஆகும்.இத்துறையின் பணிச்சூழலை மேம்படுத்தும் பொருட்டும், பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டும் கடந்த 2016 ம் ஆண்டு அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையத்தைப் பிரித்து, ஆண்டிமடத்தை தனி வருவாய் வட்டமாக அறிவித்து, ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது
புதியதாக உருவாக்கப்பட்ட இந்த வட்டாட்சியா் அலுவலகம், தற்காலிகமாக ஆண்டிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள ஒரு தனிக் கட்டிடத்தில் இயங்குகிறது. இங்கு சாா்- பதிவாளா் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், கருவூலகம், விஏஓ அலுவலகம் ஆகியவையும் இயங்கி வருகின்றன.
இதனால் ஆண்டிமடம் வருவாய் வட்டத்துக்குட்பட்ட அழகாபுரம், ஆண்டிமடம், அணிக்குதிச்சான் (வ, தெ), ஆத்துக்குறிச்சி, அய்யூா், தேவனூா், இடையாக்குறிச்சி, இலையூா்(கி.மே), காட்டாத்தூா்(வ,தெ), கொடுக்கூா், கூவாத்தூா்(வ,தெ), குவாகம், மருதூா், பெரியகிருஷ்ணாபுரம், ராங்கியம், சிலம்பூா் (வ,தெ), சிலுவைச்சேரி, ராமன், திருக்களப்பூா், வரதராஜன்பேட்டை, வாரியங்காவல் (வ,தெ), ஜ.மேலூா் போன்ற வருவாய் கிராம மக்கள், பல்வேறு சான்றிதழ்கள் பெறுவது, அரசு நிதியுதவி பெறுவது என பல்வேறு பணிகளுக்கு மேற்கண்ட வட்டாட்சியரகத்துக்கு வந்து செல்கின்றனா். இதனால் இந்த அலுவலகம் எப்போதும் பரபரப்பாக உள்ளது.
ஆனாலும், தற்காலிகக் கட்டிடத்தில் இயங்கி வரும் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பிடவசதி, குடிநீா் வசதி, இருக்கை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் அலுவலகம் குறுகிய இடத்தில் இயங்குவதால் அலுவலா்கள் தாராளமாக வேலை செய்யவும் ஆவணங்களை வைக்கவும் போதிய இடவசதியின்றி தவியாய்த் தவித்து வருகின்றனா்.
மழை பெய்யும்போது அலுவலகத்தின் மேற்கூரையில் இருந்து மழைநீா் ஒழுகி ஆவணங்கள் முழுவதும் நனைந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியா்கள் வட்டாட்சியரகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனா்.இந்தக் கோரிக்கையை ஏற்று, நிதி விடுவிக்கப்பட்டு, கடந்த 2017 ம் ஆண்டு, ஆண்டிமடம் பேருந்து நிலையம் பின்புறம் காலியாக உள்ள அரசு இடத்தில் வட்டாட்சியா் அலுவலக கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது.வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலா் அலுவலகம், நில எடுப்பு, தோ்தல் பிரிவு என அனைத்துப் பிரிவு அலுவலகங்களும் செயல்படும் வகையில் கட்டப்பட்ட இந்த அலுவலகம், கடந்த 2019ம் ஆண்டில் முடிக்கப்பட்டு, 6 ஆண்டுகளாக திறப்பு விழாவுக்காகக் காத்திருக்கிறது.
இதனால் பொதுமக்கள் மற்றும் ஊழியா்கள் கடும் அவதிப்படுகின்றனா்.தற்போது இந்த அலுவலகம் கட்டிடம் முன் முள்புதா்கள் மண்டி, திறந்தவெளி மதுக் கூடமாக மாறி வருகிறது. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் 6 ஆண்டுகளாக திறக்கப்படாமல் கிடப்பில் போட்டியிருப்பது மக்கள் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியரகக் கட்டுமான பணியும், கடலூா் மாவட்டம் முஷ்ணம் வருவாய் வட்டாட்சியரக கட்டுமானப் பணியும் ஒரே நேரத்தில் நடைபெற்றன.
ஆனால் முஷ்ணம் அலுவலகம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால் ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் 6 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் திறப்பு விழா காணாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அலுவலகத்தை திறந்து வைத்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனா்.
The post தற்காலிக கட்டிடத்தில் மழைநீர் ஒழுகி ஆவணங்கள் நனைகின்றன ஆண்டிமடம் புதிய வட்டாட்சியர் அலுவலம் திறப்பது எப்போது? appeared first on Dinakaran.