தர்மயுத்த அணி நிர்வாகிகள் இடையே தனி யுத்தம் தொடங்கியிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2 months ago 9

‘‘ரெய்டு வரும் போது தப்பிச்சு, ப வைட்டமின்ல நனையுறாங்களாமே’’ என்று ஆச்சரியமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல சேத்துல தொடங்கி பட்டுல முடியுற தாலுகாவுல பார்மர்ஸ் தங்களோட, நிலம் வீட்டுமனைகள் எல்லாத்தையும், அளவீடு செய்றதுக்கும், பட்டா மாற்றம் செய்றதுக்கும் சர்வேயர் டிபார்ட் மெண்ட்ல கவர்மெண்ட்டுக்கு செலுத்த வேண்டிய பீஸ் கட்டிட்டு காத்துகிடக்குறாங்களாம். கவர்மெண்ட் பீஸ் கட்டினாலும், அளவீடு செய்றதுக்கு ப வைட்டமின் இருந்தால் தான் வேலைய முடிச்சு கொடுக்குறாங்களாம்.

அதுவும் புரோக்கர்ஸ் மூலமாக போனால் தான் வேலையும் நடக்குதாம். இந்த கதையெல்லாம் தெரிஞ்சதனால, விஜிலென்ஸ் ரெய்டு போயிருக்குறாங்க. ஆனாலும், அவங்க வர்ற இன்பர்மேஷன் லீக் ஆகி சம்மந்தப்பட்டவர்கள் தப்பிச்சுடுறாங்களாம். பல நாள் தப்பு செய்றவங்க ஒரு நாள் சிக்குவாங்கன்னு ஜனங்க காத்துகிடக்குறாங்களாம். இதனால சம்மந்தப்பட்ட துறையில என்னதான் நடக்குதுன்னு அதிகாரிங்க கோப்புகளை ஆய்வு செஞ்சி, எத்தனை மாதங்களாக கோப்புகள் தேங்குது, என்ன காரணம்னு விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை எழுந்திருக்குது’’ என்று விவரித்தார் விக்கியானந்தா.

‘‘ஊழல் அதிகாரிகளை குறி வைத்த நிர்வாகி….’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா. ‘‘குஜராத்தில் பிரதமர் மோடியின் நிழலாக இருந்த அதிகாரி, அண்மையில் புதுச்சேரி நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற பிறகு, புதுவையில் உள்ள உயரதிகாரிகளின் ஊழல்கள் குறித்து விவரங்களை சேகரிக்க துவங்கினார். இதற்கு பயந்து ஒரு ஐஏஎஸ் அதிகாரி புதுவையில் இருந்து டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு ஜம்மு காஷ்மீருக்கு பறந்துவிட்டார்.

இதற்கிடையே காரைக்காலில் கோயில் நில மோசடியில் தொடர்புடைய பிசிஎஸ் அதிகாரி வழக்கில் சிக்காமல் ஜாலியாக சுற்றி வந்தார். அவர் குறித்த புகாரும் நிர்வாகிக்கு கிடைத்தவுடன் காரை ஆட்சியர் மூலம் கோயில் நில மோசடியில் தொடர்புடைய பிசிஎஸ் அதிகாரியை தூக்கி சிறையில் வைத்தார். அடுத்ததாக, காவல், வருவாய் உள்ளிட்ட துறைகளில் சில அதிகாரிகள் ஊழலில் திளைத்து சொத்து குவித்துள்ளதாக நிர்வாகிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து ரகசியமாக விசாரிக்கவும் நேர்மையான அதிகாரிகளுக்கு நிர்வாகி உத்தரவிட்டுள்ளார். அவர்கள் விசாரித்து விவரங்களை அளித்தவுடன் காவல் மற்றும் வருவாய்த்துறையில் ஊழலில் சிக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதுவையில் ஒவ்வொரு துறையாக ஊழலில் சிக்கியவர்களை குறி வைத்து நிர்வாகி தூக்கி வரும் சம்பவத்தால் உயரதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதேபோல், ஆட்சியாளர்கள் அனுப்பும் தேவையில்லாத செலவு கணக்கு கோப்புகளையும் நிர்வாகி கேள்வி கேட்டு திரும்பி அனுப்பி வருகிறார்.

இதனால் ஆட்சியாளர்களும் அதிருப்தியில் இருந்து வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘மன்னர் மாவட்டத்தில் ஓபிஸ் மாவட்ட நிர்வாகிகளுக்குள் யுத்தம் நடக்குதாமே?’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்தில், வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் நகராட்சி தலைவர் உள்ளார். இதேபோல் தெற்கு மாவட்டத்தில் டிடிவி முன்னாள் ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவும் உள்ளனர். இவர்களுடன் சமீபத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஜெயந்தி விழாவிற்கு ஓபிஎஸ் வரும் போது முக்கிய நிர்வாகிகள் செல்லவில்லை. இது குறித்து நிர்வாகிகள் கேட்டால் அவர்கள் புலம்புகின்றனர்.

பலரை அழைத்து நீ தான், ஒன்றிய செயலாளர், வட்ட செயலாளர், நகர செயலாளர் என நியமித்தனர். தர்மயுத்த நாயகர் ஓபிஎஸ் பாஜ ஆதரவு பெற்று கட்சியை மீட்டு அவர் தலைமை ஏற்பார் என்று சிலர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் சென்று தேர்தல் பணிகளை மேற்கொண்டனர். இதில் ஒரு சிலர் தங்களின் சொந்த பணத்தை செலவும் செய்துள்ளனர். ஆனால், இதுவரை ஓபிஎஸ் கட்சியை மீட்டு தலைமைக்கு வரவில்லை. நீங்க எதுவும் செய்வதில்லை என்று தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக் கட்சியின் மாஜி மந்திரியான தெர்மகோல் மீண்டும் தூங்கா நகரத்து அதிகாரிகளை அதிர வைத்திருக்கிறாராமே?’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘உண்மைதான். சமீபத்தில் பாதாளச் சாக்கடை ஆய்வு ஒன்றுக்காக தனது தொகுதி பக்கம் சென்ற அவர், ‘ஏன் இப்படி சேறும், சகதியுமாக கிடக்கிறது?’ என்று கேட்க, ‘நேற்றுத்தான் மழை பெய்தது’ என ஒரு அதிகாரி சொல்லி முடிப்பதற்குள், ‘மழை என்றால் பெய்யத்தான் செய்யும், வேண்டுமானால் மதுரையை தார்ப்பாய் போட்டு மூடி விடலாமா?’ என கேட்டிருக்கிறார்.

இதனால் பதறிப்போன அந்த அதிகாரி, ‘ஏற்கனவே தெர்மகோலால் அணைத் தண்ணீரை மூடி உலகம் முழுவதும் பேமஸ் ஆனவர், இப்போது தார்ப்பாயை கையில் எடுத்திருக்காரோ’ என திகைத்து நிற்க, ‘ஏம்பா, ஏதாவது யோசனை என்றால் தயங்காம கேளுங்கப்பா… ’ என பேச்சைத் தொடர்ந்திருக்கிறார். இவரின் பேச்சைக் கேட்டு, உடனிருந்த கட்சியினரே வெளியில் காட்டிக் கொள்ளாமல் கமுக்கமாக சிரித்துக் கொண்டனராம். ‘அப்போ தெர்மகோல்.. இப்போ தார்ப்பாயா… என்னடா தூங்கா நகருக்கு வந்த சோதனை…’ என அங்கிருந்த இளவட்டங்கள் கமென்ட் அடித்ததும் காதில் விழுந்தது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சி மாசெவை ஓரங்கட்டும் பொறுப்பாளர் பற்றி சொல்லுங்க’’ ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி சிட்டி இலைக்கட்சியில மாவட்ட செயலாளருக்கும், பார்லி தேர்தலின்போது நியமிக்கப்பட்ட தொகுதி பொறுப்பாளருக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டிருக்காம். சிட்டியில வேலை செய்யாத நிர்வாகிகளை கண்டறிந்து, அந்த நிர்வாகிகளை தூக்கிட்டு புதுசா நிர்வாகிகளை போட பொறுப்பாளர் தலைமைகிட்ட ரெக்கமென்ட் செஞ்சிக்கிட்டு வராறாம்.

பொறுப்பாளர் சிபாரிசு செய்றவங்களுக்கு பதவியும் கொடுக்கப்பட்டு வருதாம். இதனால இப்போ மாவட்ட செயலாளர் மனசொடிஞ்சி போயிட்டாராம். இதுக்கிடையில கடந்த தீபாவளி பண்டிகைக்கு அந்த பொறுப்பாளர், 60 வார்டு நிர்வாகிகளுக்கும் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தாராம். நிர்வாகிகளும் ஆர்வமா போயி அவருக்கிட்ட அளவளாவிட்டு வந்தாங்களாம். இதை தெரிஞ்சதும், மாவட்ட செயலாளர் தன் பங்குக்கு 60 வார்டு நிர்வாகிகளையும் அழைச்சி வைட்டமின் ப கவர்ல போட்டு கொடுத்தாராம்.

அத வாங்கிகிட்ட அந்த நிர்வாகிகளோ மாசெவை கண்டுகிடுவதில்லையாம். எந்த குறையா இருந்தாலும் அந்த பொறுப்பாளரையே தொடர்பு கொண்டு தெரிவிக்காங்களாம். இதனால ரொம்பவே அப்செட்டான மாசெ தன்னோட பதவி தப்புமா என கலக்கத்தில் இருக்காராம். தலைமையே ரெண்டுபேரயும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறதா, உண்மையான கட்சிக்காரங்க புலம்புறாங்களாம்’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post தர்மயுத்த அணி நிர்வாகிகள் இடையே தனி யுத்தம் தொடங்கியிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article