எம்.பி.க்களுடன் ரயில்வே அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் நாளை ஆலோசனை: தென் மாவட்டங்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்குமா?

5 hours ago 3

நாகர்கோவில்: திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள எம்.பி க்கள் ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க தெற்கு ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை (16ம் தேதி) திருவனந்தபுரத்தில் கூட்டம் நடைபெற இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருவதால் கன்னியாகுமரி எம்.பி திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதைப்போல் காவல்கிணறு முதல் திருநெல்வேலி மேலப்பாளையம் வரை உள்ள பகுதிகள் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்குள் உள்ளது. ஆனால் இந்த பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருகின்ற காரணத்தால் திருநெல்வேலி எம்.பிக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து இந்த இரண்டு எம்.பிகளும் திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெறும் எம்.பி க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இவ்வாறு எம்.பி களின் கூட்டம் இவ்வாறு நடைபெற்று வருகிறது. இந்த கூட்டங்களில் தமிழக எம்.பிகள் பல்வேறு ரயில்வே கோரிக்கைகளை சமர்ப்பித்து இது குறித்து விவாதித்தனர். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளில் இதில் உள்ள கோரிக்கைகளில் பல இதுவரை நிவிர்த்தி செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், ‘எம்.பி.க்கள் வைக்கின்ற ஏராளமான கோரிக்கைகள் அப்படியே கோரிக்கைகளாக பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த கூட்டத்தில் அதே கோரிக்கைகள், ஒரு சில கோரிக்கைகள் சேர்த்து மீண்டும் தமிழக எம்.பிக்கள் சமர்ப்பிக்க இருக்கின்றனர்.

எம்.பி களின் கோரிக்கைகளை தகவல் அறியும் சட்டத்தின் வழியாக கேள்விகள் எழுப்பி தெற்கு ரயில்வே மண்டலம் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள பதில்களை படிக்கும் போது ரயில்கள் சம்பந்தமான அனைத்து பதில்களுக்கும் ஒரே பதில் காப்பி செய்து கொடுத்துள்ளனர். தெற்கு ரயில்வே நிர்வாகம் நாங்கள் ரயில்வே வாரியத்துக்கு திட்ட கருத்துரு அனுப்பிவிட்டோம். ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்து கொண்டிருக்கின்றோம் என்று பதில் அளித்து விட்டு அமைதியாக இருந்து விடுகின்றனர். இதற்கு முன்பும் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளில் புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அனைத்தும் ரயில்வே வாரியத்தின் கைகளில்தான் உள்ளது என்று பதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய திட்டங்கள், புதிய ரயில்கள், புதிய நிறுத்தங்கள் அனைத்தும் ரயில்வே வாரியம் தான் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் என்பது மொத்தம் மூன்று தான் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் புதிய ரயில்கள் இயக்குங்கள் என்று ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தால் ரயில் பெட்டிகள் பற்றாகுறையாக உள்ளது, ரயில் எஞ்சின் பற்றாகுறையாக உள்ளது, இருப்பு பாதை ஒருவழிப்பாதையாக உள்ளது, நடைமேடையில் ரயில் நிறுத்த இடம் இல்லை, பராமரிப்பு வசதிகள் இல்லை, ரயில் முனையம் இடநெருக்கடியை உள்ளது என்று காலம் கடத்துகின்றனர். ஒரு சில கோரிக்கைகளுக்கு நாங்கள் ரயில்வே வாரியத்தின் கோரிக்கையை திட்ட கருத்துருவாக சமர்ப்பித்துள்ளோம் என்று பதில் அளிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக முக்கிய கோரிக்கைகள் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

குறிப்பாக ரயில்கள் இயக்கத்தில் சென்னை – ஐதராபாத் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு, நாகர்கோவில் -சென்னை ரயிலை தினசரி ரயிலாக மாற்றம், திருவனந்தபுரம் – மங்களூர் ரயில் திருநெல்வேலிக்கு நீட்டிப்பு, திருவனந்தபுரம் – திருநெல்வேலி நேரடி மெமு ரயில்கள் இயக்கம், மதுரை– புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்கால் வரை நீட்டிப்பு, முழுவதும் குளிர்சாதன ஹம்சாபர் ரயில் ஷேடோ கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்கம், சென்னை – நிஜாமுதீன் ராஜதானி ரயிலை மதுரை, நாகர்கோவில், வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்கம் போன்ற கோரிக்கைகள் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள எம்.பி கள் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைள் பல இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே இதற்கு ரயில்வே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post எம்.பி.க்களுடன் ரயில்வே அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் நாளை ஆலோசனை: தென் மாவட்டங்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்குமா? appeared first on Dinakaran.

Read Entire Article