தர்மபுரி அரசு மருத்துவமனை முன் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள்: ஆம்புலன்ஸ்கள் வருவதில் சிரமம்

3 weeks ago 4

தர்மபுரி, அக்.21: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு, விதிகளை மீறி நுழைவாயிலில் ஆட்டோ மற்றும் வாகனங்கள் நிறுத்துவதால், ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள், நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தர்மபுரி- சேலம் மெயின்ரோட்டில், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினசரி வெளிநோயாளிகளாக 3ஆயிரம் பேரும், உள்நோயாளிகளாக 1200க்கும் மேற்பட்டோரும் வந்து செல்கின்றனர்.

அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை காண, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மருத்துமனையின் பிரதான நுழைவுவாயிலை மறித்து, ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

அதே போல் கார், மினிசரக்கு வாகனங்களும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அரசு மருத்துவமனை எதிரே எஸ்வி ரோட்டிற்கு செல்லும் சாலை செல்வதால், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் இச்சாலையை கடந்து செல்கின்றன. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நேரத்தில், அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களும், மருத்துவமனைக்குள் செல்ல கால தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக, மருத்துவமனைக்குள் செல்லும் நோயாளிகளும், டாக்டர்களும், அரசு மருத்துவமனை முன் நிறுத்தப்படும் வாகனங்களால் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறாக, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கேட்டை மறித்து, ஆட்டோ மற்றும் வாகனங்களை நிறுத்தும் ஓட்டுனர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தர்மபுரி மட்டுமின்றி கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நோயாளிகளை அவசரமாக அழைத்து வரும்போது, மருத்துவமனையின் நுழைவாயிலில் ஆட்டோ மற்றும் சில வாகனங்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால், பல்வேறு இடையூறு ஏற்படுகிறது. எனவே, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அரசு மருத்துவமனையின் நுழைவாயில் முன் நிற்காமல் தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முன்பு வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவாயில் முன்பு இருபுறமும் பேரிகாடு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேரிகாடு தடுப்புகளை மீறி, சில ஆட்டோக்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். ஆம்புலன்ஸ் வரும் வழி மற்றும் ஆம்புலன்ஸ் வருகையின் போது, ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது என விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்துள்ளோம். இனி நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

மருத்துவமனை எதிரே சாலை விரிவாக்கம்
அரசு மருத்துவமனை அருகே நிலவள வங்கி உள்ளது. இதன் முன்பு அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் உள்ளது. அதனை கடந்து, சிறிது தொலைவில் வெண்ணாம்பட்டி, ரயில் நிலையம் செல்லும் சாலை பிரிகிறது. அதேபோல, அரசு மருத்துவமனை புறநோயாளிகள் கட்டிடம் எதிரே உள்ள நுழைவுவாயில் அருகே, நகருக்குள் வரும் பயணிகளை ஏற்றி, இறக்க பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், இச்சாலையின் இருபுறமும் பகல் வேளைகளில் அதிக அளவு நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், வாகனங்கள் அவ்வப்போது நீண்ட வரிசையில் நிற்கின்றன. இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை எதிரே ஏற்கெனவே உள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் 24 அடி அகலத்திற்கும், சுமார் அரை கிலோ மீட்டர் நீளத்துக்கும், சாலையை விரிவாக்கம் செய்து அங்கு பஸ் நிறுத்தங்கள் அமைக்கும் பணி, நெடுஞ்சாலைத் துறை சார்பில், ₹1.50 லட்சம் மதிப்பில் சில ஆண்டுக்கு முன்பு நடந்தது.

சாலை விரிவாக்கம் செய்வதற்கு முன், காலியாக இருந்த இடத்தில் வேன்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. பணிகள் முடிந்தும், அந்த இடம் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு வராமல், மீண்டும் அந்த இடத்தில் சுற்றுலா வேன்கள், பொக்லைன் இயந்திரங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாப்பிற்கு சாலை விரிவாக்கம் செய்தும், பயன் இல்லாமல் போனது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

The post தர்மபுரி அரசு மருத்துவமனை முன் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள்: ஆம்புலன்ஸ்கள் வருவதில் சிரமம் appeared first on Dinakaran.

Read Entire Article