"தர்பூசணியில் ரசாயன கலவையா..?" - உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி கூறுவது என்ன..?

1 day ago 2

சென்னை,

கோடை காலம் தற்போது தொடங்கிய நிலையில் வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சாலை ஓரங்களில் தர்பூசணி, சாத்துக்குடி, இளநீர் போன்ற குளிர்பானக்கடைகள் கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.

இந்தசூழலில், சமீபத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தர்பூசணிகளில் செயற்கை நிறமூட்டிகள் ஊசி மூலம் செலுத்தப்படுவதாகவும், டிஸ்யூ பேப்பரில் தர்பூசணி பழத்தை தொட்டு எடுத்தால் அந்த சிவப்பு சாயம் அதில் ஒட்டிக் கொள்ளும் என்றும் கூறியிருந்தார்.

இதை தர்பூசணி விவசாயிகள் கடுமையாக மறுப்பு தெரிவித்திருந்தனர். மேலும் இயற்கையாக விளைந்த தர்பூசணி பழங்களில் டிஸ்யூ பேப்பரை வைத்து எடுத்தாலும் சிவப்பு ஒட்டும் என்றும், மாதுளை, திராட்சை போன்ற பழங்களிலுமே அதன் நிறம் ஒட்டும் என சுட்டிக்காட்டி அவை அந்த பழங்களில் உள்ள இயற்கை நிறமூட்டிகளே என விவசாயிகள் வாதிட்டனர். மேலும் உணவு பாதுகாப்புத்துறையினரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் தர்பூசணி விவசாயிகள் அவற்றை விற்க முடியாமல் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் 80 ஆயிரத்திற்கும் கூடுதலான பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் இன்னும் அறுவடை செய்யப்படவில்லை. தர்பூசணி பழங்கள் குறித்த மக்களின் அச்சம் விலகி, அதன் விற்பனை அதிகரிக்காத பட்சத்தில் அனைத்து உழவர்களும் தாங்க முடியாத இழப்பை சந்திக்க நேரிடும் என்று பல்வேறு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தர்பூசணியால் எந்த ஆபத்தும் இல்லை என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், " தர்பூசணியால் எந்த ஆபத்தும் இல்லை. பொதுமக்கள் அச்சமின்றி உண்ணலாம். தர்பூசணியில் செயற்கை நிறம் ஏற்றியதாக நாங்கள் இதுவரை எந்த வழக்கும் பதியவில்லை. தர்பூசணியில் எல்லா வியாபாரிகளும் ரசாயனம் கலப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை. தர்பூசணி பழங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவை. 

சென்னையில் ஊசி மூலமாக ரசாயனம் செலுத்தி செயற்கையாக நிறமூட்டப்படுவதாக எங்கும் கண்டறியப்படவில்லை. சென்னையின் ஒரு சில இடங்களில் கெட்டுப் போன பழங்கள் விற்கப்படுவது மட்டுமே ஆய்வில் கண்டறியப்பட்டது. எல்லா இடங்களிலும் தர்பூசணிகளில் நிறமூட்டி பயன்படுத்துவதாக கருதுவது தவறு.

பழம் விற்பவர்கள் எங்களுக்கு எதிரி இல்லை. நான் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படவில்லை" என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் கூறினார். 

Read Entire Article