
சென்னை,
தர்பூசணி பழங்களில் ஊசி போட்டு நிற கலப்படம் செய்கின்றனர் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்த தவறான கருத்தால் தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிலோ ரூ.15க்கு விற்ற தர்பூசணி தற்போது கிலோ ரூ.3 ஆக குறைந்துவிட்டது. விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஏக்கருக்கு தலா ரூ. 50ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கான இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு' என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 8-ம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அந்த போராட்டத்தில், தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். குத்தகை விவசாயிகள் சாகுபடி உரிமையை உறுதிப்படுத்தி அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளனர்.