தர்பூசணி குறித்து சமூக வலைதள தகவலால் பரபரப்பு

1 day ago 4

சிவப்பு, சுவையாக இருக்க ஊசி மூலம் மருந்து செலுத்தப்படுகிறதா? தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஆய்வு

சென்னை: தர்பூசணி சிவப்பாக இருக்க ஊசி போன்ற மருந்துகள் செலுத்தப்படுவதாக எழுந்த வதந்தியால் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் திடீர் ஆய்வு நடத்தினார். பிறகு, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

சென்னையையொட்டிய திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் 4455 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணியை சாகுபடி செய்து வருகின்றனர். பெரும்பாலும் பூண்டி, கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், மீஞ்சூர், சோழவரம் ஆகிய வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் தர்பூசணி பழங்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், தர்பூசணி பழங்கள் சிவப்பாக இருக்க ஊசி போன்ற மருந்துகள் செலுத்தப்படுவதாக வதந்திகள் பரவி வருவதால் விற்பனை மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

இதை தொடர்ந்து, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உத்தரவின்பேரில் தர்பூசணி சாகுபடி செய்யப்படும் விவசாயிகளின் வயல்களில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ஜெபக்குமாரி அனி தலைமையில், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் தர்பூசணி சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நிலங்களுக்கு நேரடியாக சென்று பழங்களின் தரத்தை ஆய்வு செய்தனர். பழங்களில் நிறத்திற்காகவும், சுவைக்காகவும் ஊசி போடப்படுவதில்லை, இயற்கையாகவே பழங்களில் தேவையான நிறமும், சுவையும் உள்ளது என்பதை உறுதிப்படுத்தினர்.

பின்னர் திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெபக்குமாரி அனி கூறுகையில், ‘‘தர்பூசணி பழங்களில் ஊசி செலுத்த முற்படும்போது பழங்கள் தன்மையை இழந்து உடனடியாக கெட்டுவிடும். எனவே பழங்களில் எந்தவிதமான கலப்படமும் செய்யப்படுவதில்லை. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். கோடைகாலங்களில் உடலுக்கு குளிர்ச்சியையும், பல்வேறு விதமான நன்மைகளையும் தரும் தர்பூசணி பழங்களை எந்தவித பயமும் இன்றி சுவைக்கலாம்’’ என்றார்.

குளிர்பான விற்பனையை அதிகரிக்கவே வதந்தி பரப்புகிறார்கள்; விவசாயிகள் நல சங்கம் வேதனை

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செங்கல்பட்டு மாவட்டம் விவசாயிகள் சங்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நல சங்க தலைவர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது: தர்பூசணி விளைச்சலில் ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஊசி போட்ட தர்பூசணி பழத்தை விற்பனை செய்வதாக சமூக வலைத்தளத்தில் தவறான தகவல் பரவி வருகிறது. விவசாயிகள் எந்த ரசாயன உரத்தையும் தர்பூசணி விளைச்சலில் பயன்படுத்துவதில்லை, இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உணவு பாதுக்காப்பு அதிகாரிகள் தவறான தகவலை கூறியுள்ளனர். அவர்கள் மீது செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலச்சங்கம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டும். இந்த பிரச்னை காரணமாக தர்பூசணி பழங்களை வியாபாரிகள் வாங்காத காரணத்தால் பழங்கள் செடியிலேயே அழுகி போகின்றன. பிஞ்சு தர்பூசணி பழத்தை உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷிடம் தருகிறோம். அவர் அதில் ஊசி போட்டு எப்படி ரசாயனம் பரவுகிறது என்று காண்பிக்க வேண்டும். இல்லையேல் அவர் தர்பூசணி பற்றி கூறிய விஷயத்தை தவறு என்று வாபஸ்பெற வேண்டும். அதுமட்டுமின்றி அவர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்.

உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் தவறான தகவலை பரப்பியதால் தமிழகம் முழுவதும் 50,000 ஏக்கர் தர்பூசணி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு டன் ரூ.16,000க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது ரூ.3000 அல்லது ரூ.4000 மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. தனியார் குளிர்பான நிறுவனங்கள் பை ஒன் கெட் ஒன் என்று குளிர்பானங்களை விற்கின்றனர். அதனை விற்பனை செய்ய இதுபோன்று செய்து வருகின்றனர். தர்பூசணி விவசாயிகள் யாரும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு விவசாயம் செய்வதில்லை. விவசாயி வயிற்றிலே அடிக்காதீர்கள். லட்சக்கணக்கில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post தர்பூசணி குறித்து சமூக வலைதள தகவலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article