தருமபுரி: வருவாய்த் துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.36.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம் மற்றும் ரூ.18.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2025) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 36 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம், 17 கோடியே 52 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாய் செலவில் 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 65 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்கள், என மொத்தம் 54 கோடியே 80 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.
வருவாய்த்துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், பட்டா வழங்குதல் போன்ற சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல். பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் இணையவழிச் சேவைகளை வழங்குதல், அலுவலகப் பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் 111 வருவாய்த் துறை அலுவலகக் கட்டடங்கள் கட்டுவதற்கு 262 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டு, தற்போது வரை 71 கட்டடங்கள் 180 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் இணையவழி மூலம் 1 கோடியே 22 இலட்சம் 66 ஆயிரத்து 975 பட்டா மாறுதல் ஆணைகள் மற்றும் 17 இலட்சத்து 54 ஆயிரத்து 340 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்;
*தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம்;
தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கூடுதல் அலுவலகக் கட்டடம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் 20.1.2022 அன்று தருமபுரி மாவட்ட அரசு விழாவில் அறிவித்தார். அதன்படி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
4.25 ஏக்கர் நிலப்பரப்பில், 36 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இப்புதிய அலுவலகக் கட்டடத்தின் தரைத்தளத்தில் சிறப்பு துணை ஆட்சியர் அலுவலகம், கூட்டரங்கம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், திட்ட அலுவலர் அலுவலகம், முக்கிய பிரமுகர்களுக்கான அறை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேர்தல் பிரிவு ஆகியவையும், முதல் தளத்தில் மாவட்ட ஆட்சியர் அறை, சிறு கூட்டரங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் அறை, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) அறை, தேசிய தகவலியல் மையம், அலுவலகப் பிரிவுகள் ஆகியவையும், இரண்டாம் தளத்தில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலகம், நிலப் பிரிவு அலுவலகம், உதவி இயக்குநர்கள் அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை பிரிவு அலுவலகம் ஆகியவையும் மூன்றாம் தளத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள், நான்காம் தளத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், மாவட்ட ஊராட்சி கூட்டரங்கம், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் அறைகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், உதவி ஆணையர் கலால் அலுவலகம் போன்ற அலுவலங்களும், ஐந்தாம் தளத்தில் உதவி இயக்குநர் நில அளவை அலுவலகம், சிப்காட்டிற்கான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், துணை இயக்குநர் (சுரங்கம்) அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் இயங்கும்.
*வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்;
மதுரை மாவட்டம் – மேலூர், தருமபுரி மாவட்டம் – பென்னாகரம், தூத்துக்குடி மாவட்டம் – ஒட்டப்பிடாரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் – திண்டுக்கல் (மேற்கு) ஆகிய இடங்களில் 17 கோடியே 52 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள்;
கன்னியாகுமரி மாவட்டம் – தக்கலை மற்றும் கடலூர் மாவட்டம் – பண்ருட்டி ஆகிய இடங்களில் 65 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்; என மொத்தம் 54 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய்த் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் மு. சாய் குமார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா, இயக்குநர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) க.வீ.முரளீதரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
காணொலிக் காட்சி வாயிலாக தருமபுரி மாவட்டத்திலிருந்து வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் அ. மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ. சதீஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தருமபுரியில் ரூ.36.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.