ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது சீசன் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசனாகவும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சீசனும் கடைபிடிக்கப்படுகிறது. முதல் சீசனின்போது மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது. இம்முறை மலர் கண்காட்சி கடந்த மே மாதம் நடந்தது. மலர் கண்காட்சி காண ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வந்தனர். இந்நிலையில் கடந்த மே மாதம் பெய்த தொடர் மழையால் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் பாதிக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் மழையில் குடைபிடித்தபடி பூங்காவில் உள்ள புல் மைதானங்களில் நடந்து சென்றதால் புல்வெளிகள் பாதிக்கப்பட்டது. தற்போது அந்த இடங்களில் புதிய புற்கள் பதிக்கும் பணி துவங்கி உள்ளது. குறிப்பாக, புல் மைதானங்களில் உள்ள மரங்களின் அடியில் முழுமையாக சேதமடைந்த புற்களை அகற்றி விட்டு புதிய புற்கள் பதிக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இப்பணிகள் ஓரிரு நாட்கள் மேற்கொள்ளப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இரண்டாம் சீசனுக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக மலர் செடிகள் நடவுக்காக பாத்திகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புல் மைதானங்கள் சீரமைப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
The post 2வது சீசனுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா சீரமைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.