சென்னை: தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்காத வகையில், காவிரி உபரி நீரை தருமபுரியின் வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்ப, தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த சட்டப்பூர்வமாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: “தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க அவர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் வழங்கவும் தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள், பருத்தி வகைகள் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் 59,963 விவசாயிகளுக்கு ரூ.28.23 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டத்தின் கீழ் இதுவரை, ரூ.59.41 கோடி ரூபாய், 99,025 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது.