தரமின்றி குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

1 week ago 7

சென்னை: தரமின்றி, முறையான அனுமதியின்றி அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை வெயில் எதிரொலியின் காரணமாக கேன் வாட்டர் விற்பனை என்பது அதிகரித்துள்ள நிலையில் கேன் வாட்டர் குடிநீரின் தரத்தை முழுமையாக பின்பற்றுமாறும், முறையான அனுமதி அடைக்கப்பட்ட குடிநீரில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி அதே போல் குடிநீர் சுத்திகரிப்பு முறைகளை பின்பற்ற குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்புத்துறை விதிகளின் அடிப்படையில் சூரிய ஒளி முன்னிலையில் குடிநீரை தேக்கி வைக்க கூடாது, உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளை வெளிப்படையாக அச்சிடுவது. தொடர்ந்து மாதம் தோறும் குடிநீரின் தரத்தை ஆய்வகத்திற்கு அனுப்பி கண்காணித்து அறிக்கையை தயார் நிலையில் வைத்து கொள்வது அவசியம் என வழிகாட்டுதலில் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் கால்சியம் அளவை ஒரு லிட்டர் குடிநீரில் 10 முதல் 75 மில்லிகிராம் என்ற அளவிலும், மெக்னீசியத்தின் அளவை 1 லிட்டர் குடிநீரில் 5 முதல் 30 மில்லிகிராம் என்ற அளவிலும் கடைபிடிப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்றுவது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் குடிநீரில் டிடீஎஸ் குறையும் பட்சத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க கூடிய சூழல் இருப்பதால் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் குடிநீர் சுத்திகரிப்பு முறையை முறையான உணவு பாதுகாப்புத்துறையின் வழிகாட்டுதல் அடிப்படையில் பின்பற்றுவது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குடிநீர் கேன்கள் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பி பயன்படுத்த வேண்டும் எனவும் கேன்களின் நிறம் மாறிடும் பட்சத்தில் மீண்டும், மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தொடர்ந்து அவ்வாறு செய்யும் பட்சத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், விதிகளை மீறுவோர் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரிவான ஆய்வு நடத்தி குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

The post தரமின்றி குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article