தயவு செய்து ஓய்வு முடிவை திரும்ப பெறுங்கள் - விராட் கோலிக்கு இந்திய முன்னாள் வீரர் கோரிக்கை

4 hours ago 1

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார்.

குறிப்பாக தோனிக்குப்பின் கேப்டன் பதவியை ஏற்ற விராட் கோலி இந்திய அணியை பல வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை அலங்கரிக்க வைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். அப்படிப்பட்ட அவர் 36 வயதிலேயே டெஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது பலரது மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் விராட் கோலி ஓய்வு முடிவை திரும்ப பெற்று மீண்டும் இந்தியாவுக்காக விளையாடி சாதனை படைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சில நேரங்களில் நீங்கள் மூளை மழுங்கிய நிலையில் ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலையை எதிர்கொள்வீர்கள். அப்போது நீங்கள் ஒரு முடிவை எடுப்பீர்கள். விராட் கோலிக்கும் அது இருந்திருக்கலாம். அவருக்குள் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளது. விராட் கோலியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் இருக்கிறது. அவருக்கு 10,000 ரன்கள் முக்கியம் இல்லை என்றாலும் நிறைய இளம் வீரர்கள் அந்த சாதனையை செய்வதை கனவாக கொண்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் அவர் தன்னுடைய கண்களை மூடி ஓய்வு முடிவை திரும்பப் பெறுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அது ஏராளமான ரசிகர்கள் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வரும். நான் கூட அதைச் செய்தேன். முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்து 5 நாட்கள் கழித்து நான் மீண்டும் வந்து ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடினேன்" என்று கூறினார்.

Read Entire Article