
கரூர்,
தூத்துக்குடியில் இருந்து சுற்றுலாவுக்காக கரூர் மாவட்டத்திற்கு வேனில் சிலர் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் கரூர் வெண்ணெய்மலை அருகே வேன் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஆம்னி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் எதிர்பாராதவிதமாக சிறுமி தக்சிகா (வயது 8), சிறுவன், சுற்றுலா வேன் ஓட்டுநர் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கி 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலாவிற்கு வந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.