சென்னை: தமிழ்நாட்டில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தவும் கீழ்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்ற வேண்டும். அதன்படி, அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும். சுற்றறிக்கை குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.
துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடித போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தாள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.
The post தமிழ்நாட்டில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.