சென்னை: தமிழ்நாட்டில் மீன் பிடி தடைகாலம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை அமலில் உள்ளது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இந்த தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. அரசின் இந்த உத்தரவை மீறி மோட்டார் படகுகள் மூலம் சென்று மீன் பிடித்தால் அவர்களுக்கான மானியம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜகுமார் என்பவர் தரப்பில் வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலத்தில் விசை மற்றும் மோட்டார் படகுகளை பயன்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது சுமார் 32 ஆயிரத்திற்கும் மேலான மோட்டார் படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கின்றனர். இதற்கு அப்பகுதியில் இருக்கும் அரசு அதிகாரிகள் துணை போகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு மீன்பிடி தடை காலத்தில் மோட்டார் படகுகள் கடலுக்குள் செல்ல தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், \\”இந்த விவகாரத்தில் மனுதாரர் வைத்துள்ள கோரிக்கை முக்கியமானதாக இருந்தாலும் நேரடியாக ரிட் மனுவை தாக்கல் செய்திருக்க வேண்டாம். எனவே இந்த வழக்கை இங்கு முடித்து வைக்கிறோம். இருப்பினும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர அனுமதி வழங்குகிறோம். அவர்கள் இதுகுறித்து ஆய்வு செய்து முடிவெடுப்பார்கள்” என உத்தரவிட்டனர்.
The post தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலத்தில் மோட்டார் படகு பயன்படுத்தலாமா? உயர் நீதிமன்றம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.