தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு!!

2 weeks ago 2

மதுரை : தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை பழைய விளாங்குடி, காமாட்சிநகரைச் சோ்ந்த கே.ஆா். சித்தன் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மேற்கு 6-ஆம் பகுதி அதிமுக செயலராக நான் பதவி வகித்து வருகிறேன். எனது மனைவி நாகஜோதி (அதிமுக), வாா்டு 20-இல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக உள்ளாா். காமாட்சிநகரில் கடந்த 30 ஆண்டுகளாக அதிமுக கொடிக் கம்பம் உள்ளது. இந்தக் கொடிக் கம்பம் அருகே மின்சாரக் கம்பி செல்வதால், எனது உறவினா் வீட்டருகே உள்ள இடத்தில் கொடிக் கம்பத்தை மாற்றி ஊன்ற அனுமதி கோரி, மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தேன். ஆனால், பதில் இல்லை. நான் அனுமதி கோரிய இடத்தின் அருகே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அனுமதியின்றி திமுக கொடிக் கம்பம் ஊன்றப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, காமாட்சிநகரில் அதிமுக கொடிக் கம்பத்தை மாற்று இடத்தில் ஊன்ற அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், “தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், பொது இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க இனி அனுமதி தரக்கூடாது. கட்சிக் கொடி கம்பங்கள் நடுவதால் மோதல்கள் உருவாகி, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு அதிக உயரங்களில் கட்சி கொடி கம்பங்களை அமைப்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவிடுகிறது. ஜாதி, மத ரீதியான கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் வழங்கி கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.

Read Entire Article