சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு பருவ ஆண்டில் இதுவரை 12 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: 2002-2003ம் கொள்முதல் பருவத்திலிருந்து, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் அக்டோபர் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, விவசாயிகளின் நலன் கருதி கடந்த 3 ஆண்டுகளாக 1 மாதம் முன்கூட்டியே அதாவது செப்.1ம் தேதி முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், விவசாயிகளின் நலன் கருதி, அவ்வப்போது தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையை உயர்த்துவதன் காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆண்டை காட்டிலும் நெல் வரத்து அதிகமாக உள்ளது.
கடந்தாண்டு செப்.1ம் தேதி முதல் இந்தாண்டு பிப்.7ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 2560 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதின் மூலம், 1,66,511 விவசாயிகளிடமிருந்து 11,98,043 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையாக ரூ.2603.14 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு பருவத்தில் ஆண்டில் (2024-25) பிப்.7ம் தேதி வரை 11,98,043 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த கே.எம்.எஸ் 2023-2024-ம் பருவத்தில் பிப்.7ம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட 8,47,692 மெட்ரிக் டன் நெல்லின் அளவோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு, 3,50,321 மெட்ரிக் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் நடப்பு பருவ ஆண்டில் இதுவரை 12 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: கூட்டுறவுதுறை செயலர் தகவல் appeared first on Dinakaran.