தமிழ்நாட்டில் தொடங்கியது ‘ஆபரேஷன் தாமரை’; அமித்ஷா- செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் சந்திப்பு?… அதிமுகவை மீண்டும் உடைக்க பாஜக திட்டமா?

1 day ago 3

* ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனை

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் பெங்களூர் வழியாக டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனா கட்சியை பிளந்ததை போன்று கே.ஏ.செங்கோட்டையனை பிரித்து ஈடி, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை மூலம் பாஜக தனது ஆக்டோபஸ் கரங்களால் அதிமுகவை விழுங்க முயற்சிப்பதாக மூத்த நிர்வாகிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அதிமுக கட்சிக்குள் கோஷ்டிபூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், கடந்த சில நாட்களாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாஜி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ மற்றும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இடையே பனிப்போர் நிலவுகிறது. இதனால், கே.ஏ.செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்காமலும், அவர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமலும் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டு சென்னை திரும்பினார். அதே சமயம் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று, அங்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசிவிட்டு மதுரை வழியாக கோபி திரும்பினார். செங்கோட்டையனை முன்நிறுத்தி அதிமுகவில் பாஜ காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளிவரும் நிலையில், கோபியில் இருந்து பெங்களூர் வழியாக செங்கோட்டையன் மீண்டும் இன்று இரவு டெல்லி பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜ முயற்சி செய்து வரும் நிலையில், கூட்டணியை ஏற்க பழனிசாமி ஒப்புக் கொண்டாலும் ஒருங்கிணைந்த அதிமுக என்ற திட்டத்தை ஏற்க மறுத்து வருவதால், செங்கோட்டையன் மூலமாக ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜவுடன் கூட்டணிக்கு இழுக்க முயற்சி நடைபெற்று வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இபிஎஸ்- அமித்ஷா பேச்சுவார்த்தையில் ஒருங்கிணைந்த அதிமுக, பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பிரச்னையை முன்நிறுத்தி பாஜ கூட்டணியை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனா பிளந்ததை போன்று கே.ஏ.செங்கோட்டையனை பிரித்து அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் கர்நாடாகா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய அரசுகளை கவிழ்த்து உள்கட்சி பிரச்னைகளை உருவாக்கி அங்கு பாஜ ஆட்சியை பிடித்துள்ளது. இதேபோன்று எதிர்கட்சி எம்எல்ஏக்கள், எதிர்கட்சி கூட்டணியை அபகரித்து நட்பு கரத்தை முறித்து முடமாக்குவது அமித்ஷா ஸ்டைல். அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு செங்கோட்டையனை நியமித்து அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்மூலம் வலுவான தலைமை இல்லாததால் அதிமுகவை தனது ஆக்டோபஸ் கரங்களால் அபகரித்து விழுங்க முயற்சிக்கிறது பாஜ என்று மற்றொரு அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இபிஎஸ், அமித்ஷா, செங்கோட்டையன் ஆகியோரின் செயல்களால் அதிமுக தொண்டர்கள் குழப்பமும், விரக்தியும் அடைந்துள்ளனர். அதேநேரத்தில் தமிழக அரசியல் தெரியாமல் பாஜகவினர் இந்த முறையும் ஏமாறப்போவது நிச்சயம் என்கின்றனர் அதிமுகவினர். கடந்த முறை அண்ணாமலை சொன்னதை நம்பி தமிழகத்தில் பாஜக மட்டும் 10 இடங்களில் வெல்லும் என்று மோடி, அமித்ஷா ஆகியோர் நம்பினர். ஆனால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே டெபாசிட் கிடைத்தது. பல இடங்களில் டெபாசிட் கிடைக்கவில்லை. இதனால் மோடி, அமித்ஷா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த முறையும் தமிழக அரசியல் தெரியாமல், செங்கோட்டையனை வைத்து அதிமுகவை உடைக்க பாஜக திட்டமிடுகிறது.

அதற்கு காரணம், அதிமுகவின் பலமாக உள்ள கொங்கு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன் என கருதுகிறது. ஆனால் அவர் பின்னால் ஒரு ஒன்றிய செயலாளர் கூட வர மாட்டார்கள் என்பது டெல்லி தலைவர்களுக்கு தெரியாததால், அவரை முன்னிறுத்தி அதிமுகவை உடைக்க திட்டமிடுகிறது என்கின்றனர். வேலுமணி அல்லது தங்கமணியை முன்னிறுத்தியிருந்தால் எடப்பாடி பயந்திருப்பார். ஆனால் செங்கோட்டையனை முன்னிறுத்தியதால் எடப்பாடி சந்தோசத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனாலும் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எடப்பாடி தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

The post தமிழ்நாட்டில் தொடங்கியது ‘ஆபரேஷன் தாமரை’; அமித்ஷா- செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் சந்திப்பு?… அதிமுகவை மீண்டும் உடைக்க பாஜக திட்டமா? appeared first on Dinakaran.

Read Entire Article