தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்

5 days ago 4

சென்னை,

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை வங்கக்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும் மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தால் மீன் இனம் அழிந்துவிடும் என்று கருதி மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணி அதாவது ஏப்ரல் 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு தடைக்காலத்தில் பாரம்பரிய மீன்பிடிக் கலன்கள் நீங்கலாக விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதித்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் திருநாகேஸ்வரன் கூறும்போது, 'மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு அதாவது 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கும். இந்த தடைக்காலத்தில் மீன்பிடி விசைப்படகுகள் கடலில் சென்று மீன் பிடிக்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. ஆனால் நாட்டு படகுகள் வைத்திருக்கும் மீனவர்கள் 5 கடல் மைல் தூரத்திற்குள் சென்று மீன் பிடிக்கலாம்.

மீன்பிடி தடைக்காலத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் சுமார் 800 படகுகளுக்கு மேல் உள்ளன. இதனை சேர்ந்த சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு 61 நாட்களுக்கு நிவாரணமாக ரூ.8 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்படும். இந்த தடைக்கால அறிவிப்பை மீறி மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் (1983-ம் ஆண்டு) கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.

Read Entire Article