தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

3 months ago 19

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 5,000-த்தைக் கடந்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன. குறிப்பாக, இன்றைய நாளிதழ்களில் சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும், அதில் குழந்தைகள், முதியவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெறுவதற்கு வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மழைக் காலங்களில் பரவக்கூடிய டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் விஷக் காய்ச்சல் போன்ற நோய்கள் தற்போதே மக்களை தாக்கத் துவங்கி உள்ளதாகவும்; பல்வேறு மாவட்டங்களில் டெங்கு போன்ற விஷக் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவதாகவும், இதனால் பல அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிக நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வருவதால், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும்; போதுமான மருந்துகள் வழங்கப்படுவதில்லை என்றும்; ஒருசில அரசு மருத்துவமனைகளில் ஒரே ஊசியை பல நோயாளிகளுக்குப் போடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நேற்றைய ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

எனவே, உடனடியாக தமிழ் நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்க மீண்டும். மேலும், பெரும்பான்மையான அரசு மருத்துவமனைகள் கழிவுநீரால் நிரம்பி வழிவதாகவும், அவை முழுமையாக அகற்றப்படாத நிலையில், அரசு மருத்துவமனைகளே நோய்களை உருவாக்கும் கூடாரங்களாக மாறி உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இதனால் மிகவும் பாதிப்படைகின்றனர். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்குத் தேவைப்படும் அனைத்து மருந்துப் பொருட்களும் முழுமையாக இருப்பதை சுகாதாரத் துறை அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும்.

“நோய் நாடி, நோய்முதல் நாடி… என்ற வள்ளுவர் அறிவுரைக்கேற்ப, மழைக்காலம் நெருங்குவதால் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா போன்ற விஷக் காய்ச்சல்கள் அதிகமாக பரவி உள்ளதால், தமிழ் நாடு முழுவதும் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் இணைந்து, மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று வீடுகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுத்தல்; காய்ச்சல் முகாம்கள் நடத்துதல்; தொடர்ந்து கொசு மருந்து அடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அப்பாவி மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article