தமிழ்நாட்டில் 15 பேருக்கு பத்ம விருதுகள் நடிகர் அஜித்துக்கு பத்மபூஷண்: நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனாவுக்கும் விருது

2 weeks ago 2

* கிரிக்கெட் வீரர் அஸ்வின், பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் உள்பட 11 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்

புதுடெல்லி: குடியரசு தினத்தையொட்டி, 2025ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த 15 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்ட 11 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. குடியரசுத் தினத்தையொட்டி ஒன்றிய அரசால் அறிவிக்கப்படும் இவ்விருது, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளில் வழங்கப்படும். அந்த வகையில், 2025ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

இதில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ என மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல வயலின் இசைக்கலைஞர் எல்.சுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மறைந்த பிரபல மலையாள இயக்குநர் எம்.டி.வாசுதேவன் நாயர், ஜப்பானைச் சேர்ந்த சுஷிகி மோட்டார் நிறுவனர் ஒசாமு சுஷிகி மற்றும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக நடிகர் அஜித் குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார் மற்றும் தொழில் துறை சார்பில் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, பிரபல தெலுங்கு நடிகரும் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவுமான நந்தமுரி பாலகிருஷ்ணா, பீகார் முன்னாள் துணை முதல்வர் மறைந்த சுஷில் குமார் மோடி, மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி, உபியை சேர்ந்த பெண் துறவி சாத்வி ரிதம்பரா, இந்திய ஹாக்கி அணி முன்னாள் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், மறைந்த கஸல் இசைக்கலைஞர் பங்கஜ் உதாஸ், பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர் ஆகியோருக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், மிருதங்க வித்வான் குருவாயூர் துரை, சமையல் கலைஞர் கே.தாமோதரன், ஊடகத்துறையை சேர்ந்த லட்சுமிபதி ராமசுப்பையர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஆர்.அஸ்வின், தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன், பேராசிரியர் எம்.டி.ஸ்ரீனிவாஸ், தொழிலதிபர் ஆர்.ஜி.சந்திரமோகன், சிற்பக் கலைஞர் ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, எழுத்தாளர் சீனி விஸ்வநாதன் மற்றும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் ஆகிய தமிழகத்தை சேர்ந்த 11 பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தவில் இசைக்கலையில் 50 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் வாய்ந்த புதுச்சேரியைச் சேர்ந்த இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்திக்கும் அமெரிக்க வாழ் இந்தியரான கணினி விஞ்ஞானி சேதுராமன் பஞ்சநாதன், இந்திய கால்பந்து அணி முன்னாள் கேப்டன் ஐ.எம்.விஜயன் ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பட்டியலில் 23 பேர் பெண்கள். வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர் 10 பேர், இறப்பிற்கு பிறகு 13 பேர் விருது பெறுகிறார்கள். இந்த விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வழங்குவார்.

* இந்தியா பெருமை கொள்கிறது
பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பத்ம விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அவர்களின் அசாதாரண சாதனைகளை கவுரவிப்பதிலும் கொண்டாடுவதிலும் இந்தியா பெருமை கொள்கிறது. அவர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன. விருது பெற்ற ஒவ்வொருவரும் எண்ணற்ற மக்களுக்கு நேர்மறை எண்ணத்தை விதைத்துள்ளனர்’’ என பாராட்டி உள்ளார்.

The post தமிழ்நாட்டில் 15 பேருக்கு பத்ம விருதுகள் நடிகர் அஜித்துக்கு பத்மபூஷண்: நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனாவுக்கும் விருது appeared first on Dinakaran.

Read Entire Article