
சென்னை,
'மறுமலர்ச்சி இயக்கம்' என்ற அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கப்படுகிறது. இதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. ஆனால், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் இந்தாண்டுக்கான சேர்க்கை இதுவரையிலும் தொடங்கவில்லை. எனவே 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறி்த்த விவரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை. இதனால், 25 சதவீத ஏழை மாணவர்கள் இடஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டண தொகை ஒதுக்கப்படவில்லை. நாடு முழுவதும் பல மாநிலங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை" என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் கூறுகையில், "ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசு பெரியண்ணன் மனப்பான்மையைக் காட்டுகிறது" என்று வாதிட்டார்.
இந்நிலையில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக வரும் 28-ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.