சென்னை: தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையால் குற்றவாளிகளிடம் இருந்து கடந்த 9 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 12,800 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்களுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதைபொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மாநிலம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் போதைபொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் பிற மாநில போலீசார் மத்திய புலனாய்வு அமைப்பினருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தி போதைபொருட்கள் விற்பனை செய்யும் கஞ்சா வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர். அதன் பயனாக கடந்த மார்ச் மாதம் குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 3,685 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து தீ வைத்து அழிக்கப்பட்டது. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் இதே போன்று மாநிலம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட 6,165 கிலோ கஞ்சாவும் தீயிலிட்டு அழிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களில் மாநிலம் முழுவதும் சட்டவிரோத போதை பொருட்களை ஒழிப்பதற்கான மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கையால் தனித்தனியாக வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை செய்ததாக 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளிடம் இருந்து 2,950 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை நீதிமன்ற உத்தரவுப்படி செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கம் பகுதியில் தீயிட்டு அழிக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 9 மாதங்களில் மாநிலம் முழுவதும் போதைபொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் 12,800 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post தமிழ்நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களில் 12,800 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு: போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு நடவடிக்கை appeared first on Dinakaran.