
கோவை திருச்சி ரோடு சுங்கம் போக்குவரத்து கழக அலுவலகத்தில் புதிய பஸ்கள் இயக்கம், பணி காலத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்குதல், வர்ணம் தயாரிப்பு ஆலையில் கூடுதல் இயந்திரம் துவக்குதல் மற்றும் நடமாடும் தானியங்கி பணிமனை வாகனம் துவக்க விழா நேற்று நடந்தது
இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு 13 புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். மேலும் பணி காலத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகள் 44 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதுடன், நடமாடும் தானியங்கி பணிமனை வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் சிவசங்கர், "அரசு பஸ் போக்குவரத்து துறையில் தமிழ்நாடு முழுவதும் 2,700 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் பணியின்போது இறந்த வாரிசுகளின் மகன் அல்லது மகள்களுக்கு கருணை அடிப்படையில் 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும். கண்டக்டர் பணிக்கு மகளிர் உயரம் குறைவாக இருப்பதால் விதிமுறைப்படி தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து பெண் கண்டக்டர்களை தேர்வு செய்யும்போது அவர்களின் உயரம் 10 சென்டிமீட்டர் வரை குறைவாக இருக்கலாம் என முதல்-அமைச்சர் அறிவித்தார். இதனால் பெண்களுக்கு நன்மை கிடைத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஜூலை மாதத்திற்குள் 11 ஆயிரம் புதிய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பஸ்கள் முறையாக இயக்கப்படுவதால் ஆண்டுதோறும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு போக்குவரத்து கழகம் ஒருபோதும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது. சிலர் இது தொடர்பாக தவறான தகவல் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு பஸ் போக்குவரத்து கழகம் சிறப்பாக செயல்படுவதால் அகில இந்திய அளவில் 19 விருதுகளை வென்றுள்ளது. போக்குவரத்துகழகம் சிறப்பாக செயல்பட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்" என்று அவர் கூறினார்.