தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது: ராமதாஸ் கோரிக்கை

4 months ago 14

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஓர் அங்கமான தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 132 ஏக்கர் நிலப்பரப்பில் 765 கிலோ வோல்ட் திறன்கொண்ட துணை மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது. அங்கிருந்து அரியலூர் வரை மின்பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தப் பணிகளை செய்து முடிக்க ரூ.4,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தை தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த தமிழக அரசு தீர்மானித்திருக்கிறது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆலோசகரை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஆலோசகர் தேர்வு முடிவு செய்யப்பட்டவுடன், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அது மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் பணிகளை விரைவுபடுத்தும் செயலாகும்.

இத்தகைய சூழலில், மின்சாரத்தை கொண்டு செல்வதற்காகவும் தனியாருக்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்குவது எப்படி சாத்தியமாகும்? மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கு மட்டும்தான் இது வழிவகுக்கும். எனவே, 765 கிலோ வோல்ட் துணை மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அந்தத் திட்டத்தை மின்தொடரமைப்புக் கழகமே சொந்த முதலீட்டில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article