தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்கடன் நிலுவைத்தொகை வட்டியுடன் திருப்பி செலுத்தப்படும் - நிதித் துறை தகவல்

3 hours ago 2

சென்னை,

தமிழக அரசின் நிதித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு நிதித்துறையின் 9-4-2015 ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வரையறைகளின் படி வழங்கப்பட்ட 8.06 சதவீதம் தமிழ்நாடு மாநில வளர்ச்சிகடன் 2025 நிலுவைத் தொகையானது 15-3-2025 அன்று 14-3-2025-ம் நாள் உட்பட்ட உரிய நாளது வரையிலான வட்டித் தொகையுடன் திருப்பிச் செலுத்தப்படும் என்று பொதுத் தகவலுக்காக அறிவிக்கப்படுகிறது. 15-3-2025-ம் நாளிலிருந்தும் அதற்கு பின்னரும் இக்கடனுக்கு வட்டித் தொகை சேராது.

2. 2007ஆம் ஆண்டு அரசு கடன் பத்திரங்களின் ஒழுங்குமுறை விதிகளின்படி, பொதுதுணை பேரேட்டு படிவத்தில் அல்லது மூலப் பொது துணைப் பேரேட்டு கணக்கில் அல்லது பங்கு முதல் சான்றிதழில், அரசு கடன் பத்திரங்களை வைத்திருக்கும் பதிவு பெற்ற நபர் ஒருவருக்கு, அவருடைய வங்கி கணக்கில் அல்லது மின்னணு பதிவு மூலம் நிதிகளை வரவு வைக்கும் வசதியுள்ள யாதொரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அவருடைய வரவுக் கணக்கில் உரிய விவரங்களை சேர்த்து, தொகை செலுத்துவதற்கான ஆணை வழங்குவதன் மூலம் முதிர்வுத் தொகை வழங்கப்படும்.

வங்கிக் கணக்கில் உரிய விவரங்கள் இல்லாத/மின்னணு மூலம் நிதிகளை வரவு வைப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்படாத நேர்வில், உரிய நாளில் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக, 8.06 சதவீதம் தமிழ்நாடு மாநில வளர்ச்சிகடன், 2025 தொடர்பான கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள், அவர்களுடைய கடன் பத்திரங்களை, 20 நாட்களுக்கு முன்னதாகவே, பொதுக் கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக கொடுக்கப்படும் கடன் பத்திரங்களின் பின் பக்கத்தில், உரியமுறையில் எழுதி கையொப்பமிட வேண்டும்.

பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்றில் கருவூலப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில், இக்கடன் பத்திரங்கள், பங்கு முதல் சான்றிதழ்கள் வடிவில் இருக்குமாயின், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளையில்தான் ஒப்படைக்க வேண்டுமே தவிர கருவூலத்திலோ அல்லது சார் கருவூலத்திலோ ஒப்படைக்கக்கூடாது என்பதை குறிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும்.

கடன் தொகை திருப்பிச் செலுத்தக் கோரி, கடன் பத்திரங்கள் முகப்பிடப்பட்டுள்ள இடங்கள் நீங்கலாக பிற இடங்களில் தொகையைப் பெற விரும்புவோர், கடன் பொறுப்பைத் தீர்க்கும் வாசகத்தை அப்பத்திரங்களின் பின்புறம் உரியவாறு எழுதி கையொப்பமிட்டு, சம்மந்தப்பட்ட பொதுக்கடன் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மற்றும் காப்புறுதி அஞ்சல் மூலம் அனுப்பவேண்டும். தமிழ்நாடு மாநிலத்தில், அரசு கருவூலகப் பணிகளை மேற்கொள்கின்ற யாதொரு கருவூலம் / சார் கருவூலம் அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்தத் தக்க கேட்புக் காசோலை ஒன்றை வழங்குவதன் மூலம், பொதுக் கடன் அலுவலகம், தொகை வழங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article