
மும்பை,
கேஒய்சி படிவங்களை மீண்டும் சமர்ப்பிக்குமாறு வங்கிகளிடம் இருந்து அழைப்புகள் வருவதாகவும், இதனால் தங்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதாகவும் வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் ரிசர்வ் வங்கி குறைதீர்ப்பு அதிகாரிகளின் வருடாந்திர மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் அந்த வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பேசுகையில்,
'கேஒய்சி படிவங்களை சமர்ப்பிக்குமாறு வாடிக்கையாளர்களை தொடர்ந்து அழைப்பதை வங்கிகள் தவிர்க்க வேண்டும். தங்கள் மைய தரவுதளத்தில் இருந்து தகவல்களைப் பெறுவதற்கு பெரும்பாலான வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கிளைகள், அலுவலகங்களுக்கு வழிவகை செய்யப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் அசவுகரியத்தை எதிர்கொள்கின்றனர்.
வாடிக்கையாளர்களின் புகார்களுக்குத் தீர்வு காண, வங்களின் நிர்வாக இயக்குநர்கள் முதல் கிளை மேலாளர்கள் வரை அனைவரும் ஒவ்வொரு வாரமும் நேரம் ஒதுக்க வேண்டும். அனைத்து வங்கிகளும் கட்டாயம் இதைச் செய்ய வேண்டும். இவ்வாறு குறைகளைக் களைவதற்கு உலகம் முழுவதும் உள்ள தலைமைச் செயல் அதிகாரிகள்கூட நேரம் ஒதுக்குகின்றனர். தங்கள் சொந்த நலன் கருதி வாடிக்கையாளர் சேவைகளை வங்கிகள் மேம்படுத்த வேண்டும். கடன் வசூலிப்பின்போது அடவாடியான நடவடிக்கைகளை வங்கிகள் தவிர்க்க வேண்டும் என்றார்.