70-வயது ஓய்வூதியதாரர்களுக்கு பத்து விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

5 hours ago 1

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கை எண். 308-ல், "மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 80-வயது நிறைந்தவுடன் 20 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி 70-வயது நிறையும்போது 10 சதவிகிதமும், 80-வயது நிறையும்போது மேலும் 10 சதவிகிதமும் ஓய்வூதியம் வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், இது குறித்து வாய் திறக்காமல் மவுனமாக இருக்கிறது.

எழுபது வயது ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவிகித கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முழு மருத்துவச் செலவையும் ஏற்க வலியுறுத்தியும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்கான பாராளுமன்ற நிலைக்குழு, 65-வயது முடிந்தவர்களுக்கு 5 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியமும், 70-வயது முடிந்தவர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியமும், 75-வயது முடிந்தவர்களுக்கு 15 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியமும், 80-வயது முடிந்தவர்களுக்கு 20 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியமும் அளிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், இது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் ஓய்வூதியதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஒய்வூதியதாரர்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்தாலும், மருத்துவச் செலவுக்கான முழுத் தொகையையும் காப்பீட்டு நிறுவனம் வழங்குவதில்லை என்று ஓய்வூதியதாரர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக நான்கு ஆண்டுகளுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வரையில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணமில்லா சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம் என்று இருந்தாலும், அனைத்து நேர்வுகளிலும் 60 விழுக்காடு முதல் 70 விழுக்காடு வரையிலான செலவினை மட்டுமே காப்பீட்டு நிறுவனம் ஏற்கிறது.

மீதமுள்ள தொகையை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் செலுத்த வேண்டிய அவல நிலை நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, மீதித் தொகைக்கு உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கையேந்தும் அவல நிலை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு உருவாகியுள்ளது.

வயது ஆக ஆக, மருத்துவச் செலவு அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 70-வயது ஓய்வூதியதாரர்களுக்கு பத்து விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும், வரம்பிற்கு உட்பட்டு முழு மருத்துவச் செலவையும் காப்பீட்டு நிறுவனம் ஏற்பதை உறுதி செய்யவும் முதல்-அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எழுபது வயது ஓய்வூதியதாரர்களுக்கு பத்து சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும், முழு மருத்துவச் செலவை ஏற்கவும் தி.மு.க. அரசை வலியுறுத்தல்! pic.twitter.com/Lt0JXrKN6i

— O Panneerselvam (@OfficeOfOPS) March 18, 2025


Read Entire Article