தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது

1 week ago 4

ஒவ்வொரு மாநில சட்டசபைகளிலும் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்திய அரசியலமைப்பு சட்டம் 200-வது பிரிவு கவர்னருக்கு வரையறைகளை வகுத்துள்ளது. அதன்படி ஒன்று, அந்த மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவேண்டும். இரண்டாவது, அரசிடம் விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பியும் அனுப்பலாம். மூன்றாவதாக ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அதை பரிந்துரைக்கலாம். அப்படி ஒருவேளை கவர்னர் ஒரு மசோதாவை திருப்பி அனுப்பினால், அது மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்படும்பட்சத்தில் கவர்னர் கண்டிப்பாக ஒப்புதல் கொடுத்தே தீரவேண்டும். இதையெல்லாம் தௌிவாக கூறிய அரசியலமைப்பு சட்டம் எத்தனை நாட்களுக்குள் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற காலவரையறையை மட்டும் கூறாமல் விட்டுவிட்டது.

சமீபத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அரசியலமைப்பு சட்டப்படி மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவிட்டார். அதனால் அந்த 10 மசோதாக்களும் எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் அந்தரத்தில் தொங்கியதால், 10 பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்களும் அப்படியே முடங்கி போய்விட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அதில் 20 பல்கலைக்கழகங்களுக்கு கவர்னரும், தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்திற்கு முதல்-அமைச்சரும் வேந்தராக இருக்கிறார்கள்.

கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10 மசோதாக்களில் 2 அ.தி.மு.க. ஆட்சியிலும், மீதமுள்ள 8 மசோதாக்களும் 2022 மற்றும் 2023-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியிலும் நிறைவேற்றப்பட்டவை. இவற்றில் பெரும்பாலானவை, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு கொடுக்கும் மசோதாக்கள். இந்த மசோதாக்கள் அனைத்தும் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டு, சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டவை ஆகும்.

அரசியல் சட்டப்படி இதற்கு ஒப்புதல் கொடுக்காமல் கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதி பார்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு விசாரணை செய்து தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. அரசியல் சட்டத்தில் கவர்னரின் அதிகாரத்தில் காலக்கெடு இல்லாத நிலையால், குழப்பம் இருந்த நிலையில் நல்ல வெளிச்சத்தை காட்டியுள்ளது. இந்த தீர்ப்பின்படி, சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு 30 நாட்களுக்குள் கவர்னர் ஒப்புதல் தரவேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பும்பட்சத்தில், அதற்கான காரணங்களை விளக்கி 3 மாதங்களுக்குள் திருப்பி அனுப்பவேண்டும்.

அமைச்சரவையின் ஆலோசனையை மீறி ஜனாதிபதிக்கு அனுப்புவதாக இருந்தால், அதுவும் 3 மாதங்களுக்குள் அனுப்பப்படவேண்டும். அதற்கிடையில் அந்த மசோதாவை சட்டசபை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஒரு மாதத்திற்குள் கவர்னர் கண்டிப்பாக ஒப்புதல் அளித்தே தீரவேண்டும். கவர்னருக்கு சுய முடிவு எடுக்கும் அதிகாரம் கிடையாது. ஆக, இந்த சிறப்புமிக்க தீர்ப்பால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நல்ல வழி காட்டப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கும் கிடைத்த ஒரு மகத்தான வெற்றியாகும். ஏற்கனவே பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளாத மாநிலங்களில் உள்ள கவர்னர்கள் இதுபோல மாநில அரசின் மசோதாக்களுக்கு போட்ட முட்டுக்கட்டை எல்லாம் இப்போது அகன்றுவிட்டது. மொத்தத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, போராடியது. தமிழக அரசு வென்றது மட்டுமல்லாமல் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலுவும் சேர்த்துவிட்டது.

Read Entire Article