சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் சுருக்கெழுத்தர், தட்டச்சர், உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கூடுதல் உறுப்பினர் நியமிப்பது, உத்தரவுகளை அமல்படுத்துவதற்கான நடைமுறை இல்லாதது, சுருக்கெழுத்தர்கள் காலியிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து அரசின் கருத்தை பெற்று மனுத்தாக்கல் செய்வதாக, அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கூடுதல் உறுப்பினர் நியமிக்க கோரி, ஆணையத்தின் தலைவர் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 22 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், நிதி நெருக்கடி காரணமாக கூடுதல் உறுப்பினர் நியமிக்க கோரிய கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என, ஆணையத் தலைவருக்கு, அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பதில் அனுப்பியுள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது எனக் கூறி, இதுசம்பந்தமாக பிப்ரவரி 14ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கூடுதல் உறுப்பினரை ஏன் நியமிக்கவில்லை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.