தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு திருத்தச் சட்ட மசோதாவுக்கு, திமுக உள்ளிட்ட எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு திருத்தச் சட்ட மசோதா, ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் பதவி வழி தலைவராக மாவட்ட கலெக்டரும், அரசால் நியமிக்கப்படும் நபர்களில் 3 பேர் அரசு அலுவலர்களாகவும், ஒருவர் எம்எல்ஏவாகவும் இருப்பதற்கு அந்த சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது.
மசோதா ஆய்வுக்கு எடுக்கப்பட்ட போது அதில் விடுதலைச் சிறுத்தை கட்சி எம்எல்ஏ பாலாஜி திருத்தம் கோரினார். அவர், ஒரு எம்எல்ஏவாக இருக்க வேண்டும் என்பதை 2 எம்எல்ஏக்கள் என்று மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிவதாக குறிப்பிட்டார். அதை அதே கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ முகமது ஷாநவாஸ் வழிமொழிந்தார்.
அதைத் தொடர்ந்து அந்த தீர்மானத்தை எம்எல்ஏக்களின் குரல் வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதித்தார். அந்த தீர்மானத்தை எந்தக் கட்சியினருமே ஆதரிக்கவில்லை. ஆனால் அதை எதிர்ப்போர் யார் யார்? என்று சபாநாயகர் கேட்டபோது, திமுக எம்எல்ஏக்கள் அனைவருமே எதிர்த்து வாக்களித்தனர். எனவே அந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
* சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள 3,363 பணியிடங்கள் நிரப்பப்படும்
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், காவல்துறையில் 2,833 இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படைக்கு 850 காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 1,983 காவலர்கள்), சிறைகள் மற்றும் சீர்த்திருத்தத் துறைக்கு 180 இரண்டாம் நிலை சிறை காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்கு 350 தீயணைப்பு வீராகள் என மொத்தம் 3,363 நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
* விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ரூ.1.04 கோடியில் புதிய தீயணைப்பு மண்டலம்
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு: திருச்சியை தலைமையிடமாக கொண்டு மத்திய தீயணைப்பு மண்டலம் இயங்கி வருகிறது. இந்த மண்டலத்தை இரண்டாக பிரித்து விழுப்புரம் தலைையிடமாக கொண்டு ஒரு புதிய மண்டலம் ரூ.1.04 கோடி செலவில் உருவாக்கப்படும். அதன்படி மத்திய மண்டலத்தில், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர் இருக்கும். புதிதாக அமைய உள்ள விழுப்புரம் மண்டலத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் அடங்கும்.
The post தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு திருத்தச் சட்ட மசோதா: திமுக உள்ளிட்ட எம்எல்ஏக்கள் எதிர்ப்பால் தீர்மானம் தோல்வி appeared first on Dinakaran.