தமிழ்நாடு அரசுப்பணி: கண்டிப்பாக தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் - மதுரை கோர்ட்டு

3 hours ago 2

மதுரை,

தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் 2022ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், மின்சார உற்பத்தி கழகத்தில் இளநிலை உதவியாளராக தான் வேலை பார்த்து வந்ததாகவும், தமிழ் மொழி தெரியாத காரணத்தால் தன்னை பணியில் இருந்து நிறுத்திவைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தன்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நடந்த வழக்கு விசாரணையின்போது, ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்ததால், அவரால் தமிழ் மொழியை கற்க இயலவில்லை என்றார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழக அரசுப் பணியில் ஒருவர் பணிபுரிய வேண்டும் என்றால், அவருக்கு கண்டிப்பாக தமிழ் மொழி, பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் தமிழக அரசுப் பணியாளருக்கு தமிழ் தெரியாது என்றால், அவர் எப்படி அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து குறிப்பிட்ட கால அளவிற்குள், மாநில அரசு சார்பில் நடத்தப்படும் மொழித் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், மாநில அரசின் அலுவலக மொழி தெரியவில்லை எனில், பொதுப் பணிக்கு ஏன் வருகிறீர்கள்..? என்றும் கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை இறுதி வாதங்களுக்காக நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Read Entire Article