
கோவை
தமிழ் பண்பாட்டின் தொன்மை மற்றும் செழுமையை பறைசாற்றும் விதமாக கோவை ஈஷாவில் கடந்த 3 வருடங்களாக தமிழ்த் தெம்பு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு விழா கடந்த மாதம் 27-ஆம் தேதி துவங்கி கோலகலமாகவும் மிக பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது.
இத்திருவிழாவில் தமிழ் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் 150-க்கும் மேற்பட்ட கண்காட்சி, விற்பனை மற்றும் தமிழ் கலைகளின் பயிற்சி பட்டறை அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த 150 அரங்குகளில் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் குறிப்பாக தஞ்சாவூர் ஓவியம், கள்ளக்குறிச்சி மரசிற்பம், சுவாமிமலை ஐம்பொன் சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் பொம்மைகள், தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள், மகாபலிபுரம் கற்சிற்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.
அதே போன்று தமிழ் பண்பாட்டு கலைகளின் இலவச பயிற்சி பட்டறைகளில் பல ஆண்டுகள் அந்தந்த கலைகளில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் நேரில் வந்து பயிற்சி அளித்தனர். தஞ்சாவூர் நெட்டி வேலைபாடுகள் குறித்து குடந்தை சொக்கலிங்கம், ஐம்பொன் சிலைகள் குறித்து சுவாமிமலை ஸ்தபதி செல்வம், இயற்கை சாயம் குறித்து சிவராஜ், குறும்பர் ஓவியம் குறித்து சண்முகப்பிரியா, அகழ்வாராய்ச்சி குறித்து விழுப்புரம் வீரராகவன்-மங்கை தம்பதி, தோல் பாவை கூத்து குறித்து எலிசபத் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் இந்த பயிற்சி பட்டறைகளை வழி நடத்தினர்.
இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக தினமும் மாலையில் குச்சி ஆட்டம், பெரிய மேளம், கம்பத்து ஆட்டம், சிலம்பம், ஒயிலாட்டம், வள்ளிகும்மி, தேவராட்டம், காவடியாட்டம், சலங்கையாட்டம், ஜமாப், கரகம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கலை நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டின் தூத்துக்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கலைஞர்கள் வழங்கினர்.
மேலும் சிலம்பம், கவிதை, கட்டுரை, ஓவியம், கோலம் மற்றும் பறையிசை போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல்முறையாக நடைபெற்ற பறையிசைப் போட்டியில் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியின் கலைக் குழு மிகச் சிறப்பான முறையில் பறையடித்து முதல் பரிசை வென்றனர்.
தமிழ்த் தெம்பு திருவிழாவின் மற்றொரு அங்கமாக நேற்று ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இத்திருவிழாவில் மூன்று நாட்கள் நடைபெற்ற நாட்டு மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தை நடைபெற்றது. தமிழ்த் தெம்பு திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து அரங்குகள் அமைந்த அனைவரும் ஈஷாவிற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
இவ்வாறு 12 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழா இன்று மாலையுடன் நிறைவுபெற்றது. விழாவில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.