சென்னை: தமிழ்நாடு அரசு 86 ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில், தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை சுற்று வட்டாரத்திலும், மதுரை, நெல்லை மாநகராட்சிகள் உள்ளிட்ட நகராட்சிகளிலும், மாவட்டத் தலைநகர் பகுதிகளிலும் ஆட்சேபம் இல்லாத நிலங்களில் வசித்து வரும் 86 ஆயிரம் குடும்பங்களுக்கு, அடுத்த ஆறு மாதங்களில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது என நேற்று (10.02.2025) முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற, தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் குடும்பங்கள் ஆட்சேபகரமான நிலங்களில் காலம், காலமாக வீடு கட்டி வசித்து வருகின்றன. இவைகளில் நீர்பிடிப்பு அல்லது நீர் வழி போன்ற இன்றியமையாத் தேவை என கண்டறியப்படும் இடங்களில் வசித்து வருபவர்களை வெளியேற்றி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிட்டு வருகின்றன. இந்த நீதிமன்றத் தீர்ப்புகளை அமலாக்கும் போது, குடியிருந்து வருபவர்களுக்கு மாற்று இடம் வழங்கி, வீடு கட்டி தருவதை உறுதி செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.மேலும், நீண்ட பல பத்தாண்டுகளுக்கு முன்னர், காலனி ஆட்சி நிர்வாகத்தால் ஆட்சேபனைக்குரிய இனங்கள் என ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களின் தற்போதைய நிலை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
குறிப்பாக வாரிப் புறம்போக்கு என்பது கமலை அல்ல கவலை இறைப்புப் பாசனத்துக்கு அத்தியாவசியமாகும். ஆனால், இன்று அனைத்தும் மின்மயமாகி விட்ட நிலையில், கமலை, கவலை இறைப்பு முறை முற்றிலுமாக வழக்கொழிந்து விட்டது. இது போல ஆட்சேபகரமான நிலங்களில் பலவகை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவைகள் தொடர்பாக ஆய்வு செய்து, மாநில, மாவட்ட அளவில் ஆய்வுக் குழுக்களை அமைத்து, ஆட்சேபகரமான நிலப்பகுதிகளை மறு ஆய்வு செய்து, அதன் தற்போது தன்மையை உறுதி செய்து, அந்த நிலத்தை தக்க வகை மாற்றம் செய்து, அந்த நிலத்தில் குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாடு அரசு 86 ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது: முத்தரசன் appeared first on Dinakaran.