சென்னை: தமிழக அரசின் தொடர் வலியுறுத்தலால் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான ரூ.2,999 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது. நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் 2005ம் ஆண்டு காங்கிரஸ் அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்கியது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதன்மூலம் பெரும்பாலான மக்கள் பயன்பெறும் நிலையில், இந்த வேலைவாய்ப்பில் சேர்பவர்களுக்கு தனியாக அட்டையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படாமல் இருந்தது.
இந்த திட்டமானது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் பாஜக அரசு இந்த திட்டத்தால் விவசாய பணிகள் முழுமையாக பாதிக்கப்படுவதாக கூறி இந்த திட்டத்தை போதிய கவனம் அளிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டில் இது வரை 100 நாள் வேலை திட்டத்துக்காக கொடுக்க வேண்டிய நிதியான ரூ .ரூ. 3500 கோடி மற்றும் நிலுவை தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருந்தது. தங்களுக்கான சம்பளம் கிடைக்காததை கண்டித்து பல்வேறு கிராமங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஒன்றிய அரசு நிதி வழங்காத காரணத்தினால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான ரூ.2,999 கோடியை விடுவித்தது ஒன்றிய அரசு.100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது நிதியானது விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 லட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 86% வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 29% தொழிலாளர்கள் எஸ்சி/எஸ்டி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் இதன்மூலம் பயனடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தமிழ்நாடு அரசின் தொடர் வலியுறுத்தலால் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.2,999 கோடியை விடுவித்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.