நாகப்பட்டினம், டிச.5: நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் கலெக்டர் கலெக்டர் ஆகாஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு சார்பில், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்ய சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் மற்றும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும். முதல்வரால் விருது பெறுவோர் தேர்வு செய்யப்படுவார்கள்.
எனவே 2024ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த விருதாளரை தேர்வு செய்ய பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் தங்களது விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2024 ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி நேரிலோ அல்லது தபால் மூலமாக வரும் 20ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாடு அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது appeared first on Dinakaran.