தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: கோவில்களில் சிறப்பு வழிபாடு

4 days ago 4

சென்னை:

தமிழ் புத்தாண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை முதலே பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டவண்ணம் உள்ளனர். 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. உற்சவர் வீரராகவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் வீரராகவரை வழிபடுகின்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதல் பொதுமக்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்தனர். இதே போன்று சோழவந்தான் ஐயப்பன் கோவில், ஜெனக நாராயண பெருமாள் கோவில், திருவேடகம் ஏடகநாதர் கோவில், வைகை ஆற்றங்கரை அருகில் உள்ள பிரளயநாத சிவன் கோவில், சனீஸ்வர பகவான் கோவில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சாமி கோவில், குருவித்துறை சித்திரை ரத வல்லப பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவி அருகே உள்ள கூகலூரில் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் ஈஸ்வரன் கோவிலில் நஞ்சுண்டேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல் கூகலூரில் உள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவிலில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. வலம்புரி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். கூகலூரில் உள்ள ஸ்ரீ சிவ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சித்திரை புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்கார பூஜை நடந்தது.

போடியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில், சீனிவாச பெருமாள் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு 16 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் வழக்கத்தைவிட பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுவதால், தரிசனத்திற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. 

Read Entire Article