திருச்செந்தூர் திருத்தலத்தில் முருகன் தனது திருக்கரத்தில் தாமரை மலரோடு சிவபெருமானைப் பூஜை செய்யும் வண்ணம், ஒரு கரத்தில் ஜெபமாலை, மற்றொரு கரத்தில் சக்தி ஹஸ்தம், இன்னொரு கரத்தில் தாமரை மலர் இவற்றுடன் தவக் கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
* பழனி, திரு ஆவினன்குடி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் பெயர் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் ஆகும். இந்த இடத்தின் பெயர் திரு ஆவினன்குடியாகும். இங்கே முருகன் குழந்தையாக மயில் மீது அமர்ந்து நெல்லிமர நிழலில் கோயில் கொண்டுள்ளார். மலை உச்சியில் முருகன் ராஜ அலங்காரத்தில் ஓர் அரசரைப் போல உயரமான கருவறையில் காட்சி தருகிறார். சுவாமி மலையில், சுவாமிநாத சுவாமியின் சந்நதிக்கு எதிராக மயிலுக்கு பதிலாக யானை வாகனம் உள்ளது. இது தேவேந்திரன் அளித்தது என்பது ஐதீகம். கருவறையில் முருகன் வலக்கரத்தில் தண்டம் ஏந்தியபடி ஊறு முத்திரையில் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.
* திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ந்து. இனிதே வீற்றிருந்து அருள்கிறார். ‘குன்று தோறாடல்’ என்பது முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையும் குறிக்குமாயினும், அது திருத்தணிகைத் தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கிறது எனத் தமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர். சென்னை – வடபழனியாண்டவர் கோயிலில் மூலவர் பாத காலணிகளுடன் அருள்புரிகிறார். பாத காலணிகள் அணிந்திருப்பது ஆணவத்தையும் அகங்காரத்தையும் அடியோடு நீக்குவதைக் குறிக்கிறது. மூலவரின் வலது காலானது சற்று முன் வந்ததுபோல் காணப்படுவது பக்தர்களின் குறைகளை விரைந்து வந்து நீக்குவதாக
ஐதீகம். இத்தலத்தின் சிறப்பு வேறு எந்த படை வீட்டிலும் காணமுடியாதது.
* எட்டுக்குடி முருகன் கோயில் சிவனடியார்க்கும், முருகனடியார்க்கும் ஆரா இன்ப அருளமுது பாலிக்கும் அருந்தலம் ஆகும். கந்தபுராணத்தில் கூறியுள்ளபடி இங்கு முருகன் சூரபத்மனை அழிப்பதற்கு முன்பாகத் தேவேந்திரனாகிய மயில் மீது ஏறி அமர்ந்து. அம்பறாத் தூணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையிலுள்ள வீர சௌந்தர்யம் உடையவராக வீற்றிருக்கும் வேலாயுதக் கடவுள் தான் இங்கு மூலவராக உள்ளார். இங்கு முருகன் மிகவும் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.சேலம் நகருக்கு அருகில் மலைப்பாங்கான இடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உடையாபட்டி கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது. இங்கு முருகப் பெருமானும் அன்னை பார்வதியும் எதிரெதிர் சந்நதியில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் காண முடியாது. அம்பாள் உயிராகவும் முருகன் அறிவாகவும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இங்கே மற்றொரு அதிசயமாக முருகனைச் சுற்றி மனைவியருடன் சேர்ந்த நவகிரகங்களை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
* காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற கந்தசாமி திருக்
கோயில். இக்கோயிலில் கந்தசாமி சுயம்பு மூர்த்தியாக இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக ‘சுப்பிரமணியர் யந்திரம்’ பிரதிஷ்டை செய்துள்ளனர். முருகனுக்கு பூஜை நடந்த பின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும். வாய்மீது கை வைத்துள்ள சிவனின் மடியில் அமர்ந்து உபதேசம் செய்யும் முருகன் சிலையும், கையில் வில்லேந்தி, மயில் மேல் காலை வைத்தபடி சம்ஹார முத்துக்குமார சுவாமி சிலையும் இங்கே உள்ளன. திருச்சிக்கு அருகில் 30 கல் தொலைவில் உள்ளது. செட்டிக்குளம் முருகன் கோயில். வடபழனி என்று அழைக்கப்படும் சிறுகுன்றின் மீது கோவணாண்டியாகக் கரும்பினை வில்லாக ஏற்று நிற்கும் அழகன் முருகனை இங்கு தவிர வேறு எங்குமே காண முடியாது.
* கழுகு மலையில் உள்ள முருகன் கோயில் மிகவும் பழமையானது. இங்குள்ள முருகப்பெருமான் இடப் பக்கமாகத் திரும்பி நிற்க, இடது பக்கமாகத் திரும்பி நின்ற நிலையில் இருக்கும். மயில் வாகனத்தில் கம்பீரமாக ஆறு கைகளுடன் மேற்கு முகமாகப் பக்தர்களுக்கு காட்சியளிப்பது அபூர்வமான திருக்கோலம்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திற்கு அருகிலுள்ள மணவான நல்லூரில் கொளஞ்சியப்பர் ஆலயம் உள்ளது. இத்தலத்தில் வழக்கத்திற்கு மாறாக முற்றிலும் மாறுபட்டு ‘பலிபீடம்’ ஒன்றின் வடிவில் முருகன் மூலவராக எழுந்தருளியுள்ளார். அவரே கொளஞ்சியப்பர் எனப்படுகிறார். மணி முத்தா நதிக்கரையில், மணவான நல்லூரில் பலிபீட வடிவிலே காட்சி தரும். இந்த பாலமுருகன் மிகுந்த வரப்பிரசாதி. தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பவர் என்கின்றனர்.
* ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகிலுள்ளது, சிவன் மலை. இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் முருகன் பெயர் ‘‘அன்னதான சிவாசல சுப்பிரமணிய சுவாமி’’, என்ற திருநாமம் கொண்டு எழில் வடிவில் உள்ள வள்ளியம்மையுடன் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். சிவவாக்கியருக்கு முருகன் அருள்பாலித்ததால் சிவன் மலை எனப் பெயர் பெற்றது.
நெய்வேலி அருகே அமைந்துள்ளது. வேலுடையான் பட்டு முருகன் கோயில். இது கிழக்கு நோக்கி உள்ளது. கொடி மரத்திற்கு முன்பாக ஏழு வேல்கள் பெரிய அளவில் நடப்பட்டிருக்கின்றன. கருவறையின் இருபுறங்களிலும் 8 அடி உயரமுள்ள துவார பாலகர்கள் உள்ளனர். மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வயானையுடன் கையில் வில்லும் அம்பும் ஏந்த பாதங்களில் இறகு அணிந்து ஒரு வேடன் போல் அருள்பாலிக்கிறார். இந்த மூலஸ்தான சிற்பம் அற்புதமாக ஒரே கல்லில் உருவாக்கப்
பட்டது என்பது சிறப்பம்சமாகும். பக்தர்கள் கோயிலில் காணிக்கையாக பாதக்குறடுகள் செலுத்தும் வழக்கம் உள்ளது.
* திரும்பனையூர் என்ற திருக்கோயிலில் ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. சிவபெருமானும், பார்வதியும் இருபுறமும் வீற்றிருக்க நடுவில் முருகப் பெருமான் தன் இடக்கையில் மாம்பழம் ஏந்திய வண்ணம் உள்ளார். இது சோமாஸ்கந்தர் வடிவம் எனப்படும்.சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வயானை சமேதராகக் காட்சியளிக்கிறார். உற்சவத்தின்போது, ஆலயத்தில் கட்டு மலையில் சோமாஸ்கந்தர் சந்நதியில் அமர்ந்து தரிசனம் தரும் போது பெருமானின் தேகத்திலிருந்தும், அவருடைய இருதேவியரின் மேனியிலிருந்தும் வியர்வைத்துளிகள் அரும்புவது காணக் கண் கொள்ளாக் காட்சியாகும்.
* நாமக்கல் அருகில் உள்ள கபிலர் மலையில் முருகன், குழந்தை குமார சுவாமியாகக் காட்சி தருகிறார். அவரது உருவாரம் ஞான வடிவானது. கலவை சந்தனமும் புரிநூலும் மார்பில் எழில் சேர்க்கின்றன. வேற்படையே அவருக்குரிய ஆயுதமாகக் கரங்களில் மிளிர்கிறது. முண்டிதம் செய்த முடியுடனும், இடையில் கோவணத்துடனும் வேலாயுதத்துடனும் பெருமான் காட்சியளிக்கிறார்.திருத்தணி, திருப்பரங்குன்றம், செட்டி குளம், பிரான்மலை, சிதம்பரம், இரத்தினகிரி, மாகறல், வேலூர் – ஆகிய இடங்களில் உள்ள திருக்கோயில்களில் முருகன் ‘யானை’ வாகனத்தில் வீற்றிருப்பதைக் காணலாம்.
* மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தில் மூலவரான முருகன் தேவ சேனாபதிக்குக் கீழே ஆடு, மயில், யானை, சேவல் ஆகிய நான்கு வாகனங்கள் இருப்பதைக் காணலாம். கோவைக்கு அருகில் உள்ள மருத மலையில் உள்ள சின்னப்ப தேவர் கட்டிய மண்டபம் ஒன்றில் சுமார் 5 அடி உயரமான குதிரையின் மேல் முருகன் வேலைப் பிடித்துக் கொண்டு வீற்றிருக்கிறார். குதிரைக்குக் கீழே மயில் ஆடிக்கொண்டும், அதற்குக் கீழே நாகம் இருப்பதையும் காணலாம். குதிரையின் தலைப்பக்கம் சிவபெருமானும் கால் பக்கம் பார்வதியும் நின்று கொண்டிருக்கிறார்கள்.
* திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள சின்னாளப்பட்டியிலும், சென்னிமலையிலும் நான்கு தலைகளையும் எட்டு கரங்களையும் உடைய முருகன் மயில் மேல் அமர்ந்த வடிவில் காட்சி தருகிறார்.மதுராந்தகத்திற்கு அருகில் குமார வாடி எனும் திருத்தலம் உள்ளது. இங்குள்ள திருக்கோயிலில் முருகன் யோகநிலையில் பத்மாசனமிட்டு கண் மூடிய வண்ணம் அமர்ந்த கோலத்தில் கந்தக் கடவுளாக சாந்தமாக காட்சி தருகிறார்.
* பரமக்குடிக்கு அருகில் உள்ளது பார்த்திபனூர் என்னும் முருகன் கோயில். இங்கு முருகப் பெருமான் போர்க்கோலம் பூண்ட வீரனாக ஆயுதங்கள் தாங்கி நின்ற திருக்கோலத்தில் அருங்காட்சியளிக்கிறார்.
கேரள மாநிலம் ஆல்வாய்க்கு மேற்குத் திசையில் பரூரிலிருந்து சுமார் 20.கி.மீ. தொலைவில் உள்ளது. ‘இளங்குன்னபுழா’ என்ற
* சுப்பிரமணிய சுவாமி கோயில் இதைக் கேரளத்தின் திருச்செந்தூர் என்கிறார்கள். 800 – ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள முருகன் மூல விக்ரகம் திருச்செந்தூரில் இருந்தது என்றும், சிறிது பின்னமான போது அதைக்கடலில் போட்டு விட்டார்கள் என்பதும், அது அலைகளால் அடித்துக் கொண்டு வரப்பட்டு இங்குள்ள கடற் கரையில் ஒதுங்கியது என்பதும் வரலாறு. கொச்சி மகாராஜா முன்வந்து ஒரு கோயிலை உருவாக்கினார். முருகன் விக்ரகம் இடுப்புக்குக் கீழே பின்னமாகி இருந்தது. அதை எப்படிப் பிரதிஷ்டை செய்வது என்று பிரச்னை வந்த போது பிரச்னம் வைத்துப் பார்த்ததில் இடுப்பு வரையில் கற்சிலையாகவும், அதற்குக் கீழ் பஞ்சலோகமாகவும் அமைத்துப் பிரதிஷ்டை செய்யும்படி உத்தரவாயிற்று அப்படியே செய்தார்கள். அழகிய மூல விக்ரகம் பீடத்துடன் சேர்த்து 5½ அடி உயரம் இருக்கிறது. அதுர்புஜங்கள் மேலிரு சரங்களில் சக்தி ஆயுதமும், கீழ் வலது கரம் அபயஹஸ்தமாகவும் இடக்கையை இடுப்பில் ஊன்றியவாறும் அற்புத கோலம் காட்டி அழகு முருகன் காட்சியளிக்கிறார்.
* பெங்களூரிலிருந்து ‘தொட்ட பல்லாபூர்’ போய் அங்கிருந்து 11 கி.மீ. தொலைவு போனால் ‘காட்டி சுப்ரமண்யா’ என்ற ஊர் வருகிறது. இங்கு கோயில் கொண்டிருக்கும் மூலவருக்கும் ஊருக்கும் ஒரே பெயர் தான். கோயில் வாசலில் வேலியிட்ட மேடை மீது பெரிய நாகப் பாம்பின் சிலை படம் விரித்து குடை போல் நிழல் தந்து கொண்டிருக்க அதன் அடியில் மயில் வாகனனாய் நிற்கும் சுப்ரமணியரைக் காணலாம். மூலஸ்தான விக்ரகத்தில் முன்புறம் சுப்பிரமணியரின் முகமும் பின்புறம் நரசிம்ம சுவாமியின் முகமும் அமைந்திருப்பதைக் கண்ணாடி மூலம் காணலாம். உற்சவரும் சர்ப்ப உருவம் கொண்ட சுப்பிரமணியர் தான். இங்கு பிரசாதமாக புற்றுமண் வழங்கப்படுகிறது. பாம்பு வடிவில் முருகன் அருள்பாலிக்கும் கோயில் இது ஒன்றுதான்.இலங்கைத் தீவின் முக்கியமான முருகன் கோயில் கதிர் காமம். அடர்ந்த காட்டுப் பகுதியின் நடுவில் என்றும் வற்றாத மாணிக்க கங்கை என்ற நதிக்கரையில் இத்தலம் உள்ளது. இத்தலத்தில் விக்ரக ஆராதனை கிடையாது. மூல ஸ்தானத்திற்கு முன்னால் திரைகள் தொங்குகின்றன. திரைக்குத்தான் தீபாராதனை. உள்ளே ஒரு வேல் இருக்கிறது. மரகத வேல் என்பது பெயர். அதற்குத் தான் அபிஷேகம். இதுவே முருகனாக வழிபடப்படுகிறது. இப்படி உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான ஆலயங்களில் அழகன் முருகன் அபூர்வ வடிவம் கொண்டு அருள் பாலிக்கிறார்.
டி.எம்.ரத்தினவேல்
The post தமிழ் புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய திருமுருகனின் திருத்தலங்கள் appeared first on Dinakaran.