சென்னை: அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்று பாஜவினருக்கு மேலிட இணை பொறுப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக பாஜ மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நேற்று வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த, ஒவ்வொரு பாஜ ஊழியரும் தமிழ்நாட்டில் நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவதை உறுதி செய்ய அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டணி குறித்து கூட்டாக முடிவுகளை எடுப்பார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு, மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையின் சமீபத்திய அறிக்கை போன்ற விஷயங்களுக்கு நாம் எதிர்வினையாற்றக்கூடாது. தம்பிதுரை போன்ற மூத்த தலைவர்கள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் உட்பட எந்தத் தலைவரும் இனி கூட்டணி குறித்துப் பேச மாட்டார்கள் என்று அதிமுக தலைமை தெளிவுபடுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மட்டுமே அதிமுக சார்பாக கூட்டணி குறித்து உரையாற்றுவார்.
அதேபோல், பாஜவிற்கும், தேசியத் தலைமையிடமிருந்து வழிகாட்டுதல் வரும். கொள்கை விஷயங்களில் யாரும் வெளியே சொல்லக்கூடாது. ஆனால் உள் கூட்டங்களின் போது அதையே விவாதிக்கலாம். பிரதமர் மோடியின் தலைமையை வலுப்படுத்த பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனின் வழிகாட்டுதலின் கீழ் அனைவரும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்: பாஜவினருக்கு மேலிட இணை பொறுப்பாளர் உத்தரவு appeared first on Dinakaran.