சென்னை: நீதிமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் பேசிய, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் என்று செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மசோதாவை நிறுத்தி வைத்த தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராகவும், மாநிலங்களவையின் தலைவராகவும் இருக்கிற ஜெகதீப் தன்கர், இதை சகித்துக் கொள்ள முடியாமல், வரம்புமீறி கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நேர்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்.
கடந்த காலங்களில் வேந்தராகும் உரிமை ஆளுநருக்கு இருந்தது. அந்த உரிமையை பறித்து தமிழக முதல்வரை வேந்தராக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை குடியரசு துணைத் தலைவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியுடன் பாஜவின் ஊதுகுழலாக அவர் செயல்பட்டிருக்கிறார். உச்சநீதிமன்றத்தை அச்சறுத்தும் வகையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். டாக்டர் அம்பேத்கர் வழங்கிய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பிரிவு 142-ன் மூலமாகத் தான் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் நியாயம் கிடைத்திருக்கிறது, நீதி கிடைத்திருக்கிறது.
அரசமைப்புச் சட்டப்படி தான் குடியரசு தலைவர் உட்பட அனைவரும் செயல்பட முடியும். இதில் எவரும் விதிவிலக்காக இருக்க முடியாது. எனவே, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் பேசியிருக்கிற குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை நான் மட்டுமல்ல, தமிழ்நாடே இன்றைக்கு வன்மையாக கண்டிக்கிறது, எச்சரிக்கிறது. நீதிமன்றத்தை அச்சுறுத்துகிற அவரது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post நீதிமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் பேச்சு பாஜவின் ஊதுகுழலாக துணை ஜனாதிபதி செயல்படுகிறார்: செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் appeared first on Dinakaran.