நாதமுனிகள் திருநட்சத்திரம்-7.7.2025
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற ஏரி வீராணம் ஏரி. சென்னையில் இருந்து 235 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, சென்னைக்கு நீர் தரும் நீர்த்தேக்கங்களில் ஒன் றாகும். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புகழ் பெற்ற சரித்திர நாவல் வீரநாராயண ஏரிக்கரையில் இருந்துதான் தொடங்கும்.
அந்த ஏரியின் 74 மதகுகளை வந்தியத் தேவன் குதிரையின் மீது ஏறி கடப்பதை அத்தனை தத்ரூபமாக விளக்கி இருப்பார். அந்த ஏரியின் தலை வாசலில் உள்ளதுதான் காட்டுமன்னார் குடி என்னும் திருத்தலம். காட்டுமன்னார்குடி அருகாமையில் இருக்கும் இன்னொரு திருத்தலம் திருநாரையூர். அருகருகே அமைந்த இந்த இரண்டு தலத்திற்கும் தமிழுக்கும் தமிழ் சமயமான சைவ வைணவத்திற்கும் அற்புதமானத் தொடர்பு உண்டு.
சைவத்தின் உயிர்நாடியாக விளங்குவது தேவாரம். வைண வத்தின் உயிர்நாடியாக விளங்குவது ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்ய பிரபந்தம். கிட்டத்தட்ட ஒரே காலத் தில் இந்த இரண்டு சமய மறை நூல்களும் மறைந்த பொழுது, அதனை திரும்பவும் மீட்டு இந்தத் தமிழ் உலகத்துக்குத் தந்த பெரியவர்கள் இரண்டு பேர். ஒருவர் நம்பி யாண்டார் நம்பி. மற்றொருவர் நாதமுனிகள்.
தேவாரத்தை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியின் அவதார ஸ்தலம் திருநாரையூர். அருளிச்செயல் என்று போற்றப்படும் ஆழ்வார்களின் தமிழ் மறையை மீட்டு தந்தவர் நாதமுனிகள். இவர்கள் இருவரும் அருகருகே அமைந்த தலத்தில் அவதரித்தவர்கள் என்பது மிகப்பெரிய சிறப்பு.
அவதாரச் சிறப்பு
அதில் காட்டுமன்னார்குடியில் ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் அவதாரம் செய்தவர், ஸ்ரீ மந் நாதமுனிகள். வீர நாராயணபுரம் (காட்டு மன்னார் கோவில்) என்ற திவ்ய தேசத்தில், ஈஸ்வர பட்டாழ்வாருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாத முனி, நாத ப்ரஹ்மர் என்றும் திருநாமங்கள் உண்டு. இவர் அஷ்டாங்க யோகம் மற்றும் தேவகானத்தில் வல்லவராக இருந்தார்.
நாதமுனிகள் அவருடைய திருத்தகப்பனார் மற்றும் அவருடைய திருக்குமாரருடன் வடமதுரை, வ்ருந்தாவனம், கோவர்த்தன கிரி, த்வாரகை, பதரிகாஸ்ரமம், நைமிசாரண்யம் மற்றும் பல திவ்ய தேசங்களை மங்களாசாஸனம் பண்ணுவதற்காகச் சென்றார். அப்பொழுது யமுனை நதிக் கரையில் கோவர்த்தனபுரம் என்ற கிராமத்தில் இருந்துகொண்டு எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து வந்தார்.
ஒரு நாள் எம்பெருமான் இவர் கனவில் வந்து திரும்பவும் காட்டுமன்னார் கோவிலுக்கே எழுந்தருளுமாறு கட்டளையிட, நாதமுனிகளும் திரும்பச் செல்கிறார். திரும்பும் வழியில் வாரணாசி, பூரி ஜகந்நாத், சிம்ஹாசலம், திருவேங்கடம், கடிகாசலம், காஞ்சிபுரம் (மற்றும் பல திவ்ய தேசங்கள்), திருவஹிந்திரபுரம், திருக்கோவலூர், திருவரங்கம் மற்றும் திருக்குடந்தை திவ்ய தேசங்களை மங்களாசாஸனம் செய்து விட்டுக் காட்டு மன்னார் கோயிலுக்குச் செல்கிறார். அங்கேதான் இவர் வாழ்வின் திருப்புமுனையை எம்பெருமான் இவருக்குக் காட்டியருளினான்.
தமிழைத்தேடிய பயணம்
ஒரு நாள், சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் மேல்நாட்டிலிருந்து (மேல் கோட்டை திருநாராயணபுரம்) காட்டு மன்னார் கோயில் எம்பெருமான் மன்னனார் முன்பு திருவாய்மொழியில் உள்ள “ஆராவமுதே…” பதிகத்தை சேவித்தார்கள். திருக்குடந்தைப் பாசுரம்.
“ஆராவமுதே அடியேன் உடலம்நின் பால் அன்பாலே
நீராய் அலைய கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே’’
இந்தப் பாசுரத்தை அவர்கள் இசை கூட்டி, அழகான குரலில் பாடியதைக் கேட்டதும் நாதமுனிகள் செவிகள் நிறைந்தன. அவர் மனம் முழுக்க அப்பாடலே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
“ஆராவமுதே” – எத்தனை அழகான சொல்.அப்படியானால் ஆறிய அமுதமும் உண்டோ? பாடல் சிந்தனையைத் தூண்டியது. அதிலும் நிறைவாக “குழலில் மலியச் சொன்ன ஓராயிரத் துளிப்பத்தும்” என்கின்ற வரியில் அவர் கவனம் சென்றது. அவர்கள் பாடி நிறுத்தியவுடன், நாதமுனிகள் ஆர்வத்தோடு கேட்டார். “அருமை. அருமை. ஞானத் தமிழ் கேட்டு என் செவிகள் பயன் பெற்றன. இது அந்தாதி தொடையில் இருக்கிறது. இப்பாடலின் கடைசி பாசுரம் ஆயிரத்துள் இப்பத்தும் என்று வருகின்றது.
மற்ற பாடல்கள் உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்க, “எங்களுக்கு இந்தப் பத்து பாடல்கள் மட்டுமே தெரியும்’’ என்று அவர்கள் சொல்ல, “அப்படியானால் மீதி 990 பாடல்கள் இருக்க வேண்டுமே” என்று அவர் மனம் நாடியது. அப்பாடல் களைத் தேடி பலப்பல இடங்களில் ஓடியது. அது கிடைக்கும் வரை உணவும் உறக்கமும் இன்றி மனம் வாடியது.கடைசியில் அவர் ஆழ்வாரின் அவதாரத் தலமான ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அங்கே பராங்குசதாசர் என்கின்ற பெரியவரைச் சந்தித்து விசாரித்தார். அப்பொழுது நம்மாழ் வாரின் சீடரான மதுரகவி ஆழ்வாரின் 12 பாடல்களையும் அவர் தந்தார்.
“இப்பாடல்களை 12 ஆயிரம் முறை ஒரே நோக்கத்தோடு நம் மாழ்வாரை தியானித்து பாராயணம் செய்தால், நம்மாழ்வார் உங்கள் முன் தோன்றுவார். உங்கள் விருப்பம் நிறைவேறும்’’ என்றார்.
உடனடியாக அந்தப் பன்னிரெண்டு பாடல்களையும் பன்னீராயிரம் முறை பத்மாசனத்தில் அமர்ந்து மூச்சை யோக வழியில் நிலைநிறுத்தி ஜெபம் செய்தார் யோகீஸ்வரரான நாதமுனிகள். நம்மாழ்வாரும் நாதமுனிகளுக்கு ப்ரத்யக்ஷமானார். அஷ்டாங்க யோகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் அதனுடைய ஸகல அர்த்த விசேஷங்களையும் அருளினார். எப்படி எம்பெருமான் நம்மாழ்வாருக்கு ஸகல அர்த்த விசேஷங்களையும் அருளினானோ, அதே அர்த்தங்களை நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அருளினார்.
இதைத் தான் உபதேச ரத்தினமலையில், மணவாளமாமுனிகள் “அருள் பெற்ற நாதமுனி” என்று அருளிச்செய்தார். இனி இந்தத் தங்கத் தமிழை தரணியெங்கும் பரப்புவதே தன்னுடைய தலையாய நோக்கம் என்று முடிவெடுத்தார். நாதமுனிகள் இல்லையென்றால் வைணவத் தமிழாகிய ஆழ்வார்களின் பாசுரங்கள் இல்லை. இதை பின்வருமாறு மணவாள மாமுனிகள் குறிப்பிடுகின்றார்.
தெருளுற்ற வாழ்வார்கள் சீர்மை அறிவாரார்
அருளிச் செயலை அறிவாரார்- அருள்பெற்ற
நாதமுனி முதலாம் நம் தேசிகரை யல்லால்
பேதை மனமே யுண்டோ பேசு.
வைணவ குருபரம்பரை இந்த நாதமுனி களிடம் இருந்துதான் தொடங்குகிறது. அவர் வழியே வந்த ஆசாரியர்தான் ஆளவந்தாரும் ராமானுஜரும்.
நாதமுனிகளின் பண்ணிசை அடைவு
இனி அவர் தமிழிசைக்குச் செய்த தொண்டினைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
ந நாதேன வினா கீதம் ந நா தேனே வினா ஸ்வர:
ந நாதேன வினா நிருத்தம் தஸ்மாத் நாதாத்மகம் ஜகத்
நாதம் இல்லாமல் கீதம் கிடையாது. ஸ்வரங்கள் கிடையாது. நாட்டியம் கிடையாது. இவ்வுலகமே நாதம்தான். நாலாயிரம் பாசுரங்களும் கிடைத்த பிறகு பாசுரங்களை முறையாகத் தொகுத்ததும், அதில் இசைக்குரிய 3000 பாசுரங்களுக்கு தமிழ் மரபில் அமைந்த பண்களில் அடைவு செய்ததும் நிகரற்ற பணியாகும், நாதமுனி என்கின்ற பெயரே நாதத்தை தியானம் செய்தவர் என்கின்ற பொருளிலேயே வருகிறது. நாதம் என்றாலே இறைவனைக் குறிக்கும். பிரணவத்தைக் குறிக்கும். வேதத்தைக் குறிக்கும். வேதம் தானே. திருப்பல்லாண்டு. பிரணவம் என்று சொல்கின்றோம். அதை பெரியாழ்வார் தாளம் வைத்துக் கொண்டு பாடினார். இறைவனுக்குப் பல்லாண்டு பாடுவது என்பதுதான் வழிபாட்டில் உத்தமமான வழிபாடு. அதை நினைத்துக் கொண்டிருந்தவர் நாதமுனி.
காளம் வலம்புரியன்ன நற் காதல் அடியவர்க்கு
தாளம் வழங்கி தமிழ்மறையின் இன்னிசை தந்த வள்ளல்
மூளும்தவநெறி மூட்டிய நாதமுனிகள்கழலே
நாளும் தொழுதெழுவோம் நமக்கு
இனி யார் இந்த நானிலத்தே?
தமிழ் மறை என்று சொல்லுகின்றார். தமிழ் மறை என்பது 4000 பாசுரங்களையும் குறிக்கும். குறிப்பாக திருவாய்மொழியைக் குறிக்கும். யாழின் இசை வேதத்து இயல் அல்லவா. இந்த நாத உபாசனை தான் மதுரகவியாழ்வார் செய்தார். அந்த பாவத்தை புரிந்து கொண்டதால்தான் நாதமுனிகள் ஆழ்வார் பாசுரங்களை பண்ணோடு இணைக்க முடிந்தது. பண்ணோடு பாடினால்தான் அது ஒரு பண் பாட்டை கொடுக்கும்.
பண் – பாடல்களில் அமைந்துள்ள இசையின் முறை நிலையாகும் ஆரோசையிலும் அமரோசையிலும் ஏழு சுரங்களும் பாடும் பொழுது பண் என்று அழைக்கப்படுகிறது.ஒலி பிறக்கும் இடங்களான நெஞ்சு, மிடறு, முதலிய எட்டு இடங்களிலும் ஒலிகள் பண்ணப்படுவதாலும் எடுத்தல், படுத்தல் முதலிய எட்டு செயல்களாலும் ஒலிகள் பண்ணப்படுவதாலும் பண் என்று பெயர்.
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்
கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் இதற்கு உரை வகுத்த பரிமேலழகர் பாலையாழ் முதலிய 103 பண்களை பாடல் தொழில்களான என்று குறிப்பிடுவதன் மூலமாக அவர் காலத்தில் 103 பண்களில் இருந்ததை நாம் அறிகின்றோம். தமிழிசை இலக்கணத்தில் பண் திறம் பற்றிச் சொல்லப்படுகிறது. அது ஐந்திணைகளுக்கு தக்கவாறு வகைப்படுத்தியுள்ளனர். பாலைப் பண், குறிஞ்சிப்பண், முல்லைப் பண், மருதப்பண், நெய்தல் பண்சங்க இலக்கியங்களில் பண் வகுக்கப்பட்ட நூல் பரிபாடல். இதற்கு இசை அமைத்தவர்கள் பாலையாழ், நோதிரம் காந்தாரம் என்ற மூன்று பண்களைக் கையாண்டுள்ளனர். இதில் பாலை யாழ் என்பது பாலை நில மக்கள் இசைக்கப்படுவது.
தேவாரத்தில் பண்களைத் தொகுத்தது போல் நாதமுனிகளும் தமிழ்ப் பண்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் நாதமுனிகள் கூடுதல் பண்களை இணைத் திருக்கிறார். நாதமுனிகள் வைபவ பிரகாசிகையில் இது குறித்த மிக நீண்ட கட்டுரையை திருச்சித்ரகூடம் ஏ.வீ.ரங்காச்சார்யர் ஸ்வாமி இயற்றியிருக்கிறார். அதில் தேவாரத்தைவிட 7 பண்கள் கூடுதலாக அதாவது 30 பண்கள் இருப்பதாகக் கொடுத்திருக்கிறார் தேவாரத்திற்கு இருபத்தி மூன்று பண்கள்தான் தேவாரத்தில் இருக்கக்கூடிய ஒரு சில பண்கள் திவ்யபிரபந்தத்தில் இல்லை; நாதமுனிகளின் பண்ணிசை அடைவில் உள்ள சில பண்கள் தேவாரத்தில் இல்லை.
இசை வல்லுனரான நாதமுனிகள் பலப்பல பண்களில் பாசுரங்களை அமைத்து, தன்னுடைய மருமக்களான “கீழை அகத்தாழ்வார்”, “மேலை அகத்தாழ்வார்” என்கின்ற இரு வரிடமும் பொறுப்பை ஒப்படைத்து, ஆழ்வாரின் ஈழத்தமிழரை அகிலமெங்கும் பரப்பச் செய்தார். இவர்களின் வழி வந்தோரே இன்றைய அரையர்கள். 4000 பாசுரங்களையும் இயற்பா, இசைப்பா என்று பிரித்தார். அதில் இசைப்பா 3000 பாசுரங்கள். இதை இயலாகவும் இசையாகவும் பிரிப்பதற்குக் காரணமாக அமைந்ததுகூட ஆழ்வார் பாசுரங்களில் உள்ள சில செய்திகள்தான். உதாரணமாக ஆண்டாள் நாச்சியார், “இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை பூமாலை என்று சொல்லி இருப்பதால்” அது இசையில் பாட வேண்டும் என்பது தெரிகிறது.
“யாழின் இசை வேதத்தியல்” என்று சொல்லப்பட்டாலும் மதுர கவியாழ்வார் “பாவின் இன்னிசை பாடி திரிவேன்” என்று சொன்னதாலும் திருவாய்மொழியை இசையில் தானே பாடி ஆகவேண்டும்.
“இன்னிசையால் சொன்ன மாலை” – ஆண்டாள்
“குலசேகரன் இன்னிசையில் மேவி” – குலசேகர ஆழ்வார்
“ஈட்டிய இசை திசை பரந்தன” – தொண்டரடிப்பொடியாழ்வார்
“இன்னிசையால் மாலை” – திருமங்கையாழ்வார்
“தமிழர் இசைகாரர் பத்தர்”
“செயிரில் சொல் இசைமாலை”
இவைகள் நம்மாழ்வார் பாசுரத்தில்
வருகின்ற வார்த்தைகள்.
எனவே ஆழ்வார் பாசுரங்களில் உள்ளே சொல்லப்பட்ட நுட்பமான குறிப்புகளை வைத்துக் கொண்டுதான் அதற்கு இசை அடைவு கொடுத்தார். எந்தப் பண்ணில் பாட வேண்டும் என்பதையும் தீர்மானித்தார் நாதமுனிகள். அவர் அன்றைக்கு தொகுத்த இயலும் இசையும்தான், இன்றைக்கும் வைணவ வழிபாட்டு முறைகளில் பிணைந்து கிடக்கிறது, இவ்வகையில் ஆழ்வார்களின் அருந்தமிழை அனைத்துலகும் பெறும்படிச் செய்ததும் அதை பண்ணொடு அமைத்துக் கொடுத்ததும், தமிழ் உலகத்துக்கும், சமய உலகத்துக்கும், நாதமுனிகள் செய்த மிகப் பெரிய தொண்டு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அவருடைய அவதார தினத்தில், (ஆனி அனுஷம்) அவருடைய திருவடியைப் போற்றுவோம்.
முனைவர் ஸ்ரீ ராம்
The post தமிழுக்கும் தமிழ் இசைக்கும் நாதமுனிகள் செய்த தொண்டு appeared first on Dinakaran.