திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக, தமிழ்மொழிக்கு அருந்தொண்டாற்றி வரும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழுக்குத் தொண்டாற்றும் பெருமக்களை முதுமைக் காலத்திலும் வறுமை தாக்காத வண்ணம் மாதந்தோறும் ரூ.3500ம், மருத்துவப் படி ரூ.500 என ரூ.4,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்ப் பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டுவருகிறது.
அரசு பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும், உதவித்தொகை பெற்றோர் மறைவுக்குபின் அவரது வாரிசுதாரருக்கு அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500 மற்றும் மருத்துவப் படி ரூ.500 என ரூ.3,000 வழங்கப்படும். தமிழக அரசு தமிழ்த் தொண்டர்களைக் காக்கும் இப்பணியின் மூலம் இதுவரை 1334 முதிர்ந்த தமிழறிஞர்கள் பயனடைந்துள்ளனர். வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2024-2025ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெறலாம். அல்லது, தமிழ் வளர்ச்சித் துறை இணையதளமான www.tamilvalarchithurai.tn.gov.inல், விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, வரும் 31ம் தேதிக்குள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பு: இந்த வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மட்டும் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்களையும் ww.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
The post தமிழறிஞர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.