
புதுடெல்லி,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தின் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பாம்பன் புதிய ரெயில்வே மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி 6-ம் தேதி திறக்க இருப்பதை ஒட்டி அங்குள்ள தூக்கு மேம்பாலம் வண்ண ஒளிகளில் ஜொலிப்பதை காணலாம். இரவில் கடலில் இருந்து பார்க்கும்போது புதிய பாம்பன் பாலம் வண்ணமயமாக பல்வேறு கலர்களில் ஜொலிப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
இந்த நிலையில் புதிய ரெயில் பாலத்தின் திறப்பு விழா குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:-
நாளை, ஏப்ரல் 6ஆம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.