
திருச்சி,
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இந்த கோவில் பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிறது. மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் மற்றும் ஏறக்குறைய 53 உப சன்னதிகளும் உள்ளன. 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது. "சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள்" என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்களால் இந்த ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டது. பரப்பளவில் இந்திய அளவில் மிகப்பெரிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உலகளவில் இரண்டாவது பெரிய விஷ்ணு கோவில் ஆகும்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து காக்கும் வகையில் மூலவர் ரெங்கநாதர் மூலஸ்தானம் அருகில் பக்தர்களுக்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை கோவில் இணை ஆணையர் செ.சிவராம்குமார் தொடங்கி வைத்தார். கோடை காலம் முழுவதும் நீர்மோர் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் பக்தர்கள் சிரமம் இன்றி நடந்து செல்ல கோவில் வளாகம் முழுவதும் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளது.